இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தில் பாதுகாப்புத்துறை இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தில் பாதுகாப்புத்துறை 

இமயமாகும் இளமை: நாட்டுக்காக போராடிய செண்பகராமன்

அடிமைப்பட்ட நாட்டில் அல்ல, என் சுதந்திர நாட்டில்தான் என் சாம்பல் தூவப்பட வேண்டும் என, இறக்கும்போது உரைத்த விடுதலை வீரர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்தைச் சார்ந்த செண்பகராமன் பிள்ளை அவர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இவர், மாவீரர் செண்பகராமன் என்றும், ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்றும் அழைக்கப்படுபவர். இந்தியாவிற்கு வெளியே இருந்துகொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர்.

செண்பகராமன் அவர்கள், 1891ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு  பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். இவர், பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் விடுதலைக் கனல் எரியத் தொடங்கிய காலமாக இருந்தது.  அச்சிறிய வயதிலேயே தன்னுடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்படுத்தி 'வந்தே மாதரம்' என உரிமை முழக்கமிட்டார். விடுதலைப் போரில் இவர் காட்டிய தீவிரம் காரணமாக, ஆங்கில ஆட்சியின் காவல் துறையினர் செண்பகராமன் அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினர். தன் பெற்றோர் அனுமதியோடு, சர் வால்டர்  வில்லியம்ஸின் உதவியுடன் யாரும் அறியாமல் செண்பகராமன் அவர்கள், ஐரோப்பா  சென்றார். அங்கு இத்தாலி, சுவிட்சர்லாந்து,  பெர்லின் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்றார். 'புரோ இந்தியா' என்ற இதழைத் தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார். 1934ம் ஆண்டு மே மாதம் 26ம் நாளன்று செண்பகராமன் அவர்களின் உயிர் பிரிந்தது.

செண்பகராமன் அவர்களின் உயிர் பிரியும்முன் "நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை, நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்" என்று தன் விருப்பத்தை வெளியிட்டார். இவரின் துணைவியார் ஜான்சி அவர்கள், தன் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர இந்தியாவில் 1966ம் ஆண்டு செண்பகராமன் அவர்கள், விரும்பியபடியே அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு, நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2018, 15:07