தேடுதல்

சமூக சீர்திருத்தவாதிகள் சாவித்திரிபாய் புலே, மற்றும், அவர் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயின் சிலைகள் சமூக சீர்திருத்தவாதிகள் சாவித்திரிபாய் புலே, மற்றும், அவர் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயின் சிலைகள் 

இமயமாகும் இளமை : பெண்களுக்கான உரிமைகளும் கல்வியும்

அனைவரையும் தங்கள் பிள்ளைகளாக எண்ணி, சாதிப் பாகுபாடின்றி, கல்வியில் மேம்படுத்த முயன்று, எதிர்ப்பகளை மீறி, வெற்றியும் கண்டது பெருமைக்குரிய ஒரு தம்பதி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இம்மாதம் 5ம் தேதி, ஆசிரியர் தினத்தைச் சிறப்பித்தோம். ஆனால், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்று கேட்டால் எத்தனை பேருக்குத் தெரியும்?. அந்த பெருமைக்கு உரியவர், சாவித்திரிபாய் புலே. இவர் 1831ம் ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆன சாவித்திரிபாய் புலே அவர்கள், தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில், பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். ஜோதிராவ் புலே அவர்கள், 1846ம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி, சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து, தலித் பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் அவர்கள், கல்விப்பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து, பள்ளி சென்று, பின் வேறொரு சேலையை அணிந்துகொள்வார், சாவித்திரிபாய். விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து, நாவிதர்களை திரட்டி, 1863ம் ஆண்டு, மிகப்பெரிய போராட்டத்தினை, சாவித்திரி பாய் நடத்தினார். 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார். 1897ம் ஆண்டில் ஏற்பட்ட பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும், அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் இணைந்து, ஒரு மருத்துவமனையை அமைத்தனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு சாவித்திரிபாய் அழைத்துச் சென்று சிகிச்சை பெறச்செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு, மார்ச் 10, 1897ல் இறந்தார்.

பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது.

1998 மார்ச் 10ம் தேதி, இந்திய அஞ்சல் துறை, இவர் நினைவாக, ஓர் அஞ்சல் தலை வெளியிட்டது.

2015ம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தின் பெயர், சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2018, 15:06