sinodo vescovi per la regione pan-amazonica nell ottobre 2019 sinodo vescovi per la regione pan-amazonica nell ottobre 2019 

இமயமாகும் இளமை : வருங்கால தலைமுறைக்காக வாழும் மனிதர்கள்

வித்தியாசமாக சிந்தித்து, நல்லதைச் செய்ய நினைப்பவர்கள் மனநோயாளர்களாகவும், ஏமாளிகளாகவும் நோக்கப்படுவது, காலம் காலமாக நடைபெற்று வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இராமையா ஒரு வித்தியாசமான சாதனை மனிதர். தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மரங்களை இவர் நட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய சேவையை, தனி ஒருவராக நின்று செய்துமுடித்த இவருக்கு வயது எழுபது.

ஆரம்பத்தில் அனைவரும் இவரை ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதராகவே பார்த்தனர். ஆம், மரக் கன்றுகளும், விதைகளும் நிரப்பப்பட்ட தனது மிதிவண்டியில் மரநடுகை தொடர்பான சுலோகங்களையும் பதாகைகளையும் சுமந்தவண்ணம் பல மைல்கள் அன்றாடம் பயணித்து, மரங்களற்ற தரிசுகளில், தான் கொண்டுசெல்லும் கன்றுகளையும் விதைகளையும் நட்டுவரும் இம்மனிதர், மனநலம் பாதிக்கப்பட்டவராக நோக்கப்பட்டதில் வியப்பில்லை.

கன்றுகளையும், விதைகளையும் வாங்குதல், மற்றும், பயிரிடுவதற்கான பொருட்செலவை மேற்கொள்ள என, தனது மூன்று ஏக்கர் நிலத்தையே விற்றிருக்கிறார் இவர். ஒவ்வொரு திருமண வீட்டிலும், விசேடங்களிலும் மரக்கன்றுகளை பரிசாக வழங்குவதை பழக்கமாக வைத்துள்ளார். “நான் நட்ட ஒவ்வொரு மரமும் எந்தவித பாதிப்பும் இன்றி வளர ஆரம்பித்ததை உறுதிப்படுத்தும்வரை நான் ஓய்வதில்லை” என்று கூறும் இவர், மரம் நடுகை தொடர்பான பிரசுரங்கள், மற்றும் தகவல்களைச் சேகரித்து வைப்பதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார்.

10ம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் இம்மேதைக்கு Academy of Universal Peace என்ற அமைப்பு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியுள்ளது. இந்திய அரசு இவரது சேவையைப் பாராட்டி, 2016ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘இப்போது எனது கடமை இன்னும் அதிகரித்துள்ளது. இவ்விருதுகளுக்கு நியாயம் சேர்க்க எனது இறுதிமூச்சுவரை போராடுவேன்’ என நெஞ்சு நிமிர்த்துகிறார், இந்த எழுபது வயது மாமனிதர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2018, 15:16