மருத்துவர்களின் பணி மருத்துவர்களின் பணி 

இமயமாகும் இளமை : 21 வயதில் மருத்துவரான முதல் இந்திய பெண்

அமெரிக்காவில் மருத்துவம் படித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக மாறிய இளம்பெண், தன் 22ம் வயதிலேயே இறைபதம் அடைந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஐரோப்பிய மருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்தியப் பெண்களில் ஆனந்திபாய் ஜோஷி அவர்களும் ஒருவர். மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் மார்ச் 31, 1865ல் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி, இவரைவிட 20 வயது மூத்தவர். கோபால் ஜோஷி, ஒரு முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பெண்கல்வி ஆதரவாளர். தன் மனைவிக்குப் படிப்பிலிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவர், ஆனந்திபாய் கல்வி பயிலவும், ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் உதவினார். ஆனந்திபாயின் 14வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை மருத்துவ வசதியில்லாததால் பத்தே நாட்களில் இறந்துபோனது. குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது. கோபால்ராவ், தனது மனைவியை மட்டும் மருத்துவம் படிக்க அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தார். பென்சில்வேனியாவிலிருந்த பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்தபின், 1883ல் ஆனந்திபாய் கொல்கத்தாவிலிருந்து நியூயார்க் நகருக்குக் கப்பலில் புறப்பட்டார். ஆனந்திபாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும், அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்தன. காச நோய் அவரைத் தாக்கியது. அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி, அவர் மார்ச் 11, 1886ல் மருத்துவப் பட்டம் பெற்றார். 1886ன் இறுதியில் ஆனந்திபாய் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்தியாவில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. கோலாப்பூர் பகுதியிலிருந்த ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 26, 1887ல், 22 வயதுகூட நிரம்பாத ஆனந்திபாய் அவர்கள் காலமானார். அவரது மரணத்தால் நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2018, 15:33