Cerca

Vatican News
முனியசாமி-செருப்பு தைக்கும் தொழிலாளருக்கு கலெக்டர் பாராட்டு முனியசாமி-செருப்பு தைக்கும் தொழிலாளருக்கு கலெக்டர் பாராட்டு 

வாரம் ஓர் அலசல் – மனிதரின் தோற்றம் பார்க்காது...

ஏழ்மை நிலையிலும், முனியசாமி அவர்கள், பள்ளிக்கூடம் போகும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப் பைகளையும், செருப்புகளையும் தைத்து தந்தார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிரேசில் கிராமம் ஒன்றில் ஆலய சீரமைப்பு

பிரேசில் நாட்டின் கிராமம் ஒன்றில், ஒரு பழங்கால ஆலயத்தின் சுவர்கள் இடிந்து விழுந்துவிடும் நிலையில் இருந்தன. மழை பெய்தால் தண்ணீர் ஆலயத்தினுள் வடியும். அன்று வழிபாடு முடிந்தபின்னர், ஆலய அருள்பணியாளர், பக்தர்களிடம், இந்த ஆலயத்தை சீரமைப்பதற்கு நிதி திரட்ட முடியுமா? என்று கேட்டார். பின்னர் அனைவரிடமும், கடவுள் உங்கள் ஒவ்வொருவரையும், எந்த அளவுக்கு ஆசீர்வதித்துள்ளாரோ அந்த அளவுக்கு, உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். உங்களிடம் பணம் இருந்தால், பணத்தைக் கொண்டு வாருங்கள், சந்தையில் தக்காளி விற்று பிழைப்பு நடத்துகின்றீர்கள் என்றால், தக்காளியைக் கொண்டு வாருங்கள். அவற்றை ஏலம் விட்டு நிதி சேர்க்கலாம். இரும்புச் சாமான்கள் வர்த்தகம் செய்தால், மிகவும் நல்லது. சில ஆணிகளையும், இரும்புத் தகடுகளையும் கொண்டுவந்தால் ஆலயக் கட்டுமானப் பணிக்கு அவை உதவும். இப்படி உங்களால் இயன்றதைக் கொண்டு வாருங்கள் என்று அருள்பணியாளர் சொன்னார். ஆலய சீரமைப்புப் பணிக்கு நிதி சேர்க்கும் நாளையும் அவர் குறித்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்று பக்தர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் தொழிலுக்கேற்பவும், தங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்பவும் பொருள்களையும், பணத்தையும் கொண்டுவந்திருந்தார்கள்.  அன்று ஆலயத்தின் முகப்பில் ஒரு சவப்பெட்டி இருந்தது. இதைப் பார்த்த எல்லாரும், இறந்தது யார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் ஞாயிறு தினங்களில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் திருப்பலி நடக்காதே என்றும் மக்கள் பேசிக்கொண்டனர். அங்கே ஒரே சலசலப்பு. அந்த ஊரில் சவப்பெட்டிகள் செய்யும் வயதான மனிதர், ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். அவரைக் காட்டியே பலரும் பேசினர். ஆனால் அந்த முதியவரோ எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில் ஞாயிறு திருப்பலி முடிந்து, எல்லாரும் ஆலயத்திற்கு வெளியில் கூடினர். எல்லாரும் அவரவர் பொருள்களைக் கொண்டுவந்து வைத்தனர். அந்த முதியவரும் கடைசியாக, அந்த சவப்பெட்டியை இழுத்துக்கொண்டு வந்து வைத்தார். நிசப்தம் நிலவியது.

அந்த மயான அமைதியைக் கலைப்பதுபோல், அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு வயதானவர் முன்னால் வந்து, நான் இந்த சவப்பெட்டியை, அருள்பணியாளருக்காக, 15 ஆயிரத்திற்கு வாங்குகிறேன் என்றார். அருள்பணியாளருக்கு ஒரே அதிர்ச்சி. அவர் உடனடியாக எழுந்து நின்று, கத்தோலிக்க பெண்கள் கழகத் தலைவருக்காக, நான் இதை இருபதாயிரத்துக்கு வாங்குகிறேன் என்றார். உடனடியாக அந்தப் பெண் ஒரு குதி குதித்து, இல்லை இல்லை.. இந்த சவப்பெட்டி எனக்குரியதே இல்லை என்று கத்தினார். பின்னர், அவர், நான் இதை வேதியருக்காக, முப்பதாயிரத்துக்கு வாங்குகிறேன் என்றார். உடனே வேதியர் அப்பெண்ணிடம், நீ என்னைக் கொலை செய்யப் பார்க்கிறாயா? என்று கோபமாகக் கத்தினார். இப்படியாக, அந்த சவப்பெட்டி மாறி மாறி ஏலம் விடப்பட்டது. கடைசியாக, ஒரு வயதான செல்வந்தர் எழுந்து நின்று, நான் இந்தப் பெட்டியை, அதன் உரிமையாளருக்காக ஒரு இலட்சத்திற்கு வாங்குகிறேன் என்றார். உடனே அந்த இடம் அமைதியானது. அப்பெட்டியின் உரிமையாளர், புன்னகையுடன், அந்தச் சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு, தன் கடைக்குச் சென்றார். 

சவப்பெட்டி செய்யும் அந்த தொழிலாளர் எல்லாராலும் இகழ்வாகப் பார்க்கப்பட்டவர். மற்றவருடைய இழப்புகளிலிருந்து பொருள் ஈட்டுபவர் என்றெல்லாம் கேவலமாகப் பேசப்பட்டவர். ஆனால், இவர்தான், அன்று ஆலய மறுசீரமைப்புப் பணிக்கு, தன் பையிலிருந்து ஒரு பைசாகூடா கொடுக்காமல், பெரிய நிதியுதவி செய்தவர். நாம் வாழ்கின்ற சமூகங்களில், ஒருவரின் தோற்றத்தைப் பார்த்து, அவர் செய்யும் தொழிலைப் பார்த்து, அவர் எடைபோடப்படுகின்றார், மதிப்பிடப்படுகின்றார். ஆனால்  நம்மைப் படைத்த கடவுளோ, நாம் இருப்பதுபோலவே நம்மை ஏற்கிறார். சவுலுக்குப்பின், அடுத்த இஸ்ரயேலின் அரசரைத் தெரிவுசெய்வதில் இறைவாக்கினர் சாமுவேல் அவர்கள், சவுலுக்குப் பயந்து தாமதம் செய்தவேளை, ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு.16,7)” என்றார். அதன்பின்னர், வயலில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் தாவீதை வரவழைத்து அவரை, இஸ்ரயேலின் அரசராக, சாமுவேல் அவர்கள் திருப்பொழிவு செய்தார்.

கரூர் முனியசாமி

முனியசாமி என்பவர், கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளர். வறுமையின் விளிம்பில் இருந்த அவரும், அவரது குடும்பமும் பல ஆண்டுகளாக இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். ஏழ்மையிலும் அவருக்கு இருந்த மகத்தான மனிதாபிமானம் பற்றியும், அவரது துன்பம் நிறைந்த வாழ்க்கை பற்றியும், கடந்த ஆண்டு விகடன் இதழில், கட்டுரை ஒன்று வெளியானதற்குப்பின் அவரது வாழ்வே மாறியது. அந்தக் கட்டுரையை வாசித்த, கரூரைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான வாசகர்கள், முனியசாமி அவர்களை நேரில் சென்று பார்த்து, அவரைப் பாராட்டி, இயன்ற பல உதவிகளை வழங்கினர். அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் என்பவரும், முனியசாமி அவர்களின் கடைக்கே வந்து சந்தித்தார். மறுநாள் அவரை, தனது அலுவலகத்துக்கு அழைத்து, முப்பத்தையாயிரம் (35) ரூபாய் மதிப்பில் பெட்டி, இருபதாயிரம் ரூபாய் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி, முனியசாமி அவர்களின் மனைவிக்கு முதியோர் உதவித்தொகை போன்றவை கிடைக்க வழிசெய்தார். இப்போது முனியசாமி அவர்கள், அதே லைட்ஹவுஸ் பகுதியில், மாவட்ட ஆட்சியர் வழங்கிய பெட்டிக்குள், மெஷின் வைத்து செருப்புத் தைக்கிறார். அதே மனிதாபிமானப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றி வருகிறார். முனியசாமி அவர்கள், விகடன் நிருபர் ஒருவரிடம், இவ்வாறு சொல்லியிருக்கிறார். கடந்த வருடம் இந்நேரம் என் நிழலே என்னை மதிக்காது. செருப்புத் தைக்க வர்றவங்கலாம், நான் ஏதோ கள்ளக்கடத்தல் பண்ற மாதிரி என்னைக் கேவலமாப் பார்ப்பாங்க. சின்ன பசங்ககூட, என்னை மரியாதை இல்லாம பேசுவாங்க. `செருப்பு தச்ச ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்கவோட ஜனாதிபதி ஆனார்'னு எல்லாரும் பெருமையா பேசுவாங்க. ஆனா, நிஜத்துல என்னை மாதிரி செருப்பு தைக்கிற ஆளுங்கள வேண்டா வெறுப்பா பார்ப்பாங்க.  அப்போ கஷ்டம் மட்டுமே என்னைச் சுத்தி இருந்துச்சு. முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸுக்கு ஐந்நூறு தடவை அலைஞ்சிருப்பேன். ஒரு நாயை அடிச்சு துரத்துறாப்ல என்னை விரட்டி அடிப்பாங்க. `பேசாம குடும்பத்தோட செத்துரலாமா'னு இருந்தப்பதான், என்னைப் பத்தி பத்திரிகையில வந்தது. அதுவரை என்னை மனுஷனா மதிக்காத பலரும் என்னை மதிச்சது, கரூர்ல எங்க போனாலும் மரியாதை கிடைச்சதுன்னு நான் இந்த ஒரு வருஷத்துல அடைஞ்ச சந்தோஷம் என் வாழ்நாளைக்கும் பார்க்காதது. இன்னமும் முகம் தெரியாத பிள்ளைங்க, என்னை அப்பா, தாத்தான்னு உறவுமுறை சொல்லி கூப்பிட்டு நலம் விசாரிக்கிறாங்க. உதவியும் பண்றாங்க. இப்போ எனக்கு 66 வயசாவுது. 65 வயசு வரை அர்த்தம் இல்லாம வாழ்ந்துட்டோமேன்னு தோணுச்சு. இப்ப என் வாழ்க்கை அர்த்தமாகிட்டது. பணம், காசு பெரிசில்லை. கஷ்டத்துல கிடக்குறப்ப நாலு பேர் ஆறுதல் சொன்னா, அதுதான் ஒருத்தனை தெம்பாக்கும். அந்தத் தெம்பை, பல பெயர் தெரியாத மனிதர்கள் எனக்கு இன்னைக்கும் கொடுத்திட்டிருக்காங்க. இன்னைக்கும் எங்க கஷ்டம் பெருசா ஒழியலை. கஷ்ட ஜீவனம்தான். ஆனா, ஏதோ அர்த்தமான வாழ்க்கை வாழ்றோம்ன்ற திருப்தி இருக்கு. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு தினமும் இருபது ஜோடி செருப்பு, பைகளை இலவசமா தச்சு தர்றேன். கரூர்ல யாருக்கு செருப்பு கிழிஞ்சாலும், வண்டியில பெட்ரோலைப் போட்டுக்கிட்டு எங்கிட்டதான் வந்து தைக்க கொடுக்கிறாங்க. அன்பா விசாரிக்கிறாங்க. கேட்குற கூலியைவிட அதிகமா கொடுக்கிறாங்க. பலபேர் டீ வாங்கி கொடுக்கிறாங்க. அது போதும். எல்லா கஷ்டங்களையும் சடார்னு கடந்துருவேன். அந்தத் தெம்புல இன்னும் 30 வருஷம் இறுக்கிப் பிடிச்சு வாழ்ந்துருவேன்" கரூர் முனியசாமி அவர்கள் இவ்வாறு சொல்லி முடித்துள்ளார்.

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ஒன்று, சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீடு கட்டும் பணிகளுக்கு,  “வியர்வை சிந்தி உதவிய உள்ளங்கள்” என, தலைமை மேஸ்திரி, கொத்தனார், தச்சர், வர்ணம் பூசியவர்கள், மின்வல்லுனர் போன்ற வேலைகள் செய்த எல்லாரின் பெயர்களும் அந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளன. கடன்கொடுத்து உதவியவர்களுக்கும் அதில் நன்றி சொல்லப்பட்டுள்ளது. மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கட்டியிருக்கும் புது வீடு ஒன்றிற்கு செப்டம்பர் 16ம் தேதி, பால்காய்ச்சும் விழா நடைபெறவுள்ளது என்ற அந்த அழைப்பிதழில், உறவினர்கள் மற்றும் தாய், மனைவி, பிள்ளைகளின் பெயர்களோ இடம்பெறவில்லை. 

உரியவர்க்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தால் புகழ் நம்மைத் தேடிவரும் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. வள்ளுவரும், அடக்கம் அமரருள் உய்க்கும், அதாவது, அடக்கம் ஒருவரைப் புகழோடு வாழும் நிலைக்கு மேம்படுத்தும் என்று எழுதியுள்ளார். எனவே நாம் யாரையும் தோற்றம் பார்த்து எடைபோடாமல், மனிதரை, மனிதராய் மதிப்போம்.

வாரம் ஓர் அலசல் – மனிதரின் தோற்றம் பார்க்காது
10 September 2018, 15:13