தேடுதல்

லித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் லித்துவேனிய நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

லித்துவேனிய வரலாற்று நினைவிடங்கள்

ஒரு காலத்தில் நீதிமன்றமாகவும், சிறையாகவும், சித்ரவதை கூடமாகவும் இருந்த வில்நியூஸ் நினைவிடத்திலிருந்து, 1991ம் ஆண்டில் KGB வெளியேறியது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

முதல் உலகப் போர் முடிவுற்ற பின்னர், இரஷ்ய மற்றும் புருசிய முடியாட்சிகள் வீழ்ச்சியடைந்தன. அதைத் தொடர்ந்து, 1918ம் ஆண்டில் லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளும், தங்களின் சுதந்திரத்தை அறிவித்தன. எனினும், 1940ம் ஆண்டில், சோவியத் யூனியனின் இரஷ்ய இராணுவம், பால்டிக் நாடுகளை ஆக்ரமித்து, சோவியத் குடியரசுகள் என அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டில் இந்த பால்டிக் நாடுகளை, ஜெர்மனியின் நாத்சி அரசு கைப்பற்றி, 1944ம் ஆண்டுவரை, தன் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தது. இதைத் தொடர்ந்து, சோவியத் இரஷ்யா, மீண்டும் பால்டிக் நாடுகளை ஆக்ரமித்தது. 1990ம் ஆண்டில், சோவியத் யூனியன் கலைந்ததோடு, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளும், தங்களின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றன. இந்நாடுகள் முதன்முறையாக சுதந்திரம் பெற்றதன் நூறாம் ஆண்டு, 2018ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த முக்கியமான நிகழ்வையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடுகளுக்கு நான்கு நாள் திருத்தூதுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 22, கடந்த சனிக்கிழமையன்று லித்துவேனியா நாட்டிற்கு முதலில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்தின் இரண்டாவது மற்றும் நிறைவு நாளாகிய இஞ்ஞாயிறு மாலை,  லித்துவேனிய வரலாற்றில் மறக்க இயலாத நினைவிடங்களுக்குச் சென்று செபித்தார். நாத்சி படைகளால் 75 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1943ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, முழுவதுமாக அழிக்கப்பட்ட யூதக் குடியிருப்பு நினைவிடத்திற்கும், லித்துவேனியா, அந்நியர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தவேளையில், அதற்குப் பலியானவர்கள் மற்றும், நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்தவர்களின் நினைவிடத்திற்கும் சென்று செபித்தார் திருத்தந்தை. கம்யூனிச ஆட்சியின்கீழ் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கும் திருத்தந்தை சென்றார். இந்த நினைவிடத்தில் குறைந்தது ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான லித்துவேனியர்கள், சைபீரியா போன்ற இடங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2018, 16:33