தேடுதல்

இளம்பெண் கூமா சொம்டகா, தான் வரைந்த ஓவியத்துடன்.... இளம்பெண் கூமா சொம்டகா, தான் வரைந்த ஓவியத்துடன்.... 

இமயமாகும் இளமை – காலை இழந்தாலும், கனவை இழக்காமல்...

"நான் காலை இழந்தேன்; தாயை இழந்தேன்; வீட்டை இழந்தேன். ஆனால், கனவை இழக்காமல் வாழ்ந்தேன். அதன் பயனை இன்று காண்கிறேன். " - இளம்பெண் கூமா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இளம்பெண் கூமா சொம்டகா (Chuma Somdaka) அவர்கள், தென்னாப்பிரிக்காவின், கேப் டவுன் நகரில் வாழ்பவர். வீடற்ற நிலையில் வாழும் கூமா அவர்களுக்கு, அந்நகரின் ‘கம்பெனி பூங்கா’ கடந்த சில ஆண்டுகளாக, புகலிடமாய் இருந்து வருகிறது. 2007ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், கூமா அவர்கள், தன் வலது காலை பாதி இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர், தன் தாயையும், அவர்கள் வாழ்ந்துவந்த இல்லத்தையும் இழந்தார். அவரது புகலிடமாக மாறிய கம்பெனி பூங்காவில், கூமா அவர்கள், ஒரு நாள், ஒரு குச்சியை எரித்து, அதிலிருந்து உருவான கரித்துண்டைக் கொண்டு, தன் முதல் ஓவியத்தை வரைந்தார்.

நகரின் குப்பைத் தொட்டிகளில் அவர் திரட்டிய வண்ணங்களைக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக பல ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். வாழ்வில் தான் சந்திக்கும் பலரை, தன் ஓவியங்களின் கதாநாயகர்களாக தீட்டியுள்ளார். அவர் பூங்காவில் உறங்கிய வேளையில், அவரது ஓவியங்களில் சிலவற்றை யாரோ எடுத்துச் சென்றனர். எனவே, அன்றுமுதல், அவர் தன் ஓவியங்கள் மீது படுத்துறங்கி, அவற்றைக்  காத்து வந்தார். 2017ம் ஆண்டின் துவக்கத்தில், அவரது ஓவியங்களைக் கண்ட ஒரு சில இளையோர், அந்த ஓவியங்களைக் கொண்டு, ஒரு கண்காட்சியை உருவாக்கினர்.

தன் ஓவியங்கள், கண்ணாடிச் சட்டங்களில் மாட்டப்பட்டு, அழகானதோர் அறையில் கண்காட்சியாக மாறியதைக் கண்ட கூமா அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தார். தற்போது, ஓர் ஓவியப் பள்ளியில் பயின்றுவரும் இளம்பெண் கூமா அவர்கள், "நான் காலை இழந்தேன்; தாயை இழந்தேன்; வீட்டை இழந்தேன். ஆனால், கனவை இழக்காமல் வாழ்ந்தேன். அதன் பயனை இன்று காண்கிறேன். என் ஓவியங்களின் விற்பனை வழியே வரும் தொகையைக் கொண்டு, வீடற்றவர்களுக்கு உதவப் போகிறேன்" என்று தன் ஊடகப் பேட்டிகளில் கூறிவருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2018, 14:59