தேடுதல்

மெக்சிகோவில், இளையோருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைக் கண்டனம் செய்து இளையோரின் போராட்டம் மெக்சிகோவில், இளையோருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைக் கண்டனம் செய்து இளையோரின் போராட்டம் 

இமயமாகும் இளமை: பெருமை பேசுவது எளிது

கழைக்கூத்துக் கலைஞர், தன் சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்து விட்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி, சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று... மணல் மூட்டைகள் வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது.

அதையும் அற்புதமாக அவர் முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடிவந்து, அவரது கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்" என்று புகழ்மாலைகளைச் சூட்டினார். "என் திறமையில் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.

"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்விப்பட்ட போது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது, நானே நேரில் அவற்றைக் கண்டுவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வது மட்டுமே என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுப் பேசினார்.

"மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி. செய்வீர்களா?" என்று கேட்டார், அந்தக் கலைஞர். "உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய் சொன்னார்.

"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப்போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைகளுக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல், காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரின் சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்யப்போவதாக உறுதியளித்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர், தன் சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்து விட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2018, 15:22