தேடுதல்

ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சுவப்னா பர்மன் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சுவப்னா பர்மன் 

இமயமாகும் இளமை - சாதிக்கும் கனவை சரித்திரமாக்கிய 'சுவப்னா'

'கனவு' என்று பொருள்படும் 'சுவப்னா' என்ற பெயரைத் தாங்கிய இவர், தடகளப் போட்டிகளில் சாதிக்கவேண்டும் என்பதை, சிறுவயது முதல், தன் கனவாகக் கொண்டிருந்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அண்மையில் நிறைவுற்ற (செப்டம்பர் 2, 2018) ஆசிய விளையாட்டுக்களில், 20 வயது நிறைந்த இளம்பெண் சுவப்னா பர்மன் (Swapna Barman) அவர்கள், வரலாறு படைத்துள்ளார். 100 மீட்டர் தடையோட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உட்பட ஏழு வகையான தடகள விளையாட்டுக்கள் அடங்கிய ‘ஹெப்டத்லான்’ (Heptathlon) என்ற பிரிவில், தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தவர், சுவப்னா. இதுவரை எந்த ஓர் இந்தியரும், ஆணோ, பெண்ணோ, இந்தப் போட்டியில், பன்னாட்டளவில், தங்கப்பதக்கம் பெற்றதில்லை. 'கனவு' என்று பொருள்படும் 'சுவப்னா' என்ற பெயரைத் தாங்கிய இவர், தடகளப் போட்டிகளில் சாதிக்கவேண்டும் என்பதை, சிறுவயது முதல், தன் கனவாகக் கொண்டிருந்தார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில், ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற்ற ‘ஹெப்டத்லான்’ இறுதிப் போட்டியில், சுவப்னா அவர்கள் பங்கேற்ற வேளையில், அவரது முகத்தின் ஒரு பகுதியில் 'பிளாஸ்திரி'யை இறுக்கமாக ஒட்டியிருந்தார். முந்திய இரவுமுதல், பல்வலியால் துன்புற்ற சுவப்னா அவர்கள், அந்த வலியைக் குறைக்க 'பிளாஸ்திரி'யை இறுக்கமாக ஒட்டிக்கொண்டு, அந்தப் போட்டியில் பங்கேற்றார். தங்கப்பதக்கத்தை வென்றார். சுவப்னாவின் வாழ்வு, வலிகள் நிறைந்த வாழ்வு என்பதைக் காட்ட, அந்த 'பிளாஸ்திரி' ஓர் அடையாளமாக இருந்ததென ஊடகச் செய்தியொன்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது.

வட வங்காளத்தின் ஜல்பைகுரி (Jalpaiguri) நகருக்கருகே, கோஸ்பரா (Ghospara) கிராமத்தில், ரிக்சா இழுத்து பிழைத்துவந்த தந்தைக்கும், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய தாய்க்கும், 1997ம் ஆண்டு, பிறந்தவர் சுவப்னா. ஆறு குழந்தைகள் கொண்ட அக்குடும்பத்தின் தலைவர், பக்கவாத நோயால் படுத்த படுக்கையாகிப் போனதும், குடும்பம் வறுமையில் தவித்தது.

சிறுவயது முதல், ஒட்டப்பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுவப்னா, ஷூ வாங்க வசதி இல்லாத நிலையிலும், வெறுங்காலுடன் பயிற்சிகள் மேற்கொண்டார். இந்திய அளவில் பல போட்டிகளில் பரிசுகள் பெற்றதோடு, அப்போட்டிகளில் அதுவரை நிலவிவந்த தேசிய சாதனைகளையும் முறியடித்தார்.

பல்வேறு தடைகளைத் தாண்டி, இன்று, இந்திய விளையாட்டுத் துறையில் வரலாறு படைத்துள்ள இளம்பெண் சுவப்னா பர்மன் அவர்கள், இன்னும் பல இளையோர், துணிவுடன் கனவுகள் காண்பதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2018, 14:43