தேடுதல்

நம்பிக்கையின் அடையாளமாக விளங்கும் சிறுமலர்கள் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கும் சிறுமலர்கள் 

இமயமாகும் இளமை: அழிவின் நடுவிலும் தலைநிமிர்ந்த புல்...

தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில், கலந்து, மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் தைரியம். அதையே, நாம், நம்பிக்கையின் அடையாளமாகவும் எண்ணிப்பார்க்கலாம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

புல்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கவிதையின் உரைநடை சுருக்கம் இதோ...

அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "தைரியம்னா என்னாண்ணே?" என்று தம்பி அண்ணனிடம் கேட்டான். அண்ணன், தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி, தைரியத்தை விளக்கப்பார்த்தான் அண்ணன். தம்பிக்கு விளங்கவில்லை.

அவர்கள் நடந்து சென்ற வீதியின் ஓரத்தில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலை நிமிர்ந்து, நின்று கொண்டிருந்தது. அண்ணன், தம்பியிடம், அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான்.

கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்தக் காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்துபோன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல், நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில், கலந்து, மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் தைரியம். அதையே, நாம், நம்பிக்கையின் அடையாளமாகவும் எண்ணிப்பார்க்கலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 14:45