தேடுதல்

அன்னை தெரேசாவின் நினைவாக, அகில உலக பிறரன்பு நாள் அன்னை தெரேசாவின் நினைவாக, அகில உலக பிறரன்பு நாள் 

இமயமாகும் இளமை – மனிதப்பிறவிகளை உருவாக்கும் கல்வி

மனிதாபிமானம் என்ற கல்வியை உலகெங்கும் சொல்லித்தந்த உன்னத ஆசிரியரான புனித அன்னை தெரேசாவுக்கு நம் உளம் நிறைந்த நன்றிகள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவராகவும் (1952-1962), பின்னர், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவராகவும் (1962-1967) பணியாற்றிய இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி, இந்தியாவில், ஆசிரியர்கள் தினமாகச் சிறப்பிக்கப்படுகிறது.

சிறியோரையும், இளையோரையும் வடிவமைப்பதன் வழியே, ஒரு நாட்டையே வடிவமைக்கும் வலிமை பெற்ற ஆசிரியர்களைப்பற்றியும், அவர்கள் சொல்லித்தரவேண்டிய கல்வியைப்பற்றியும் சிந்திக்க, ஆசிரியர் தினம் அழைப்பு விடுக்கிறது. நாத்சி வதை முகாமிலிருந்து உயிரோடு மீண்டுவந்தவர்களில் ஒருவர், கல்வியைப்பற்றி எழுதியுள்ள வரிகள் நம் சிந்தனைக்கு சவால் விடுக்கின்றன:

வதைமுகாமிலிருந்து உயிரோடு மீண்டவன் நான். மனிதர்கள் யாரும் காணக்கூடாதவற்றை என் கண்கள் கண்டன. பொறியியலை நன்கு கற்றவர்களால், நச்சுவாயுக்கூடங்கள் கட்டப்பட்டன. மருத்துவத்தை நன்கு கற்றவர்களால், குழந்தைகளுக்கு விஷ ஊசிகள் போடப்பட்டன. தாதியர் பணிகளுக்காகப் பயிற்சி பெற்றவர்களால், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளியிலும், கல்லூரியிலும் பயின்று வந்த மாணவர்களால், பெண்களும், குழந்தைகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனவே, நாம் சொல்லித்தரும் கல்வியைப்பற்றி எனக்கு பல ஐயங்கள் எழுகின்றன.

என் வேண்டுகோள் இதுவே: மனிதப்பிறவிகளாக வாழ்வது எப்படி என்பதை, உங்கள் குழந்தைகளுக்கு முதலில் கற்றுத்தாருங்கள். கல்விக்கூடங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால், படித்த அரக்கர்களையும், திறமைகள் மிகுந்த மனநல நோயாளிகளையும் உருவாக்காதீர்கள்.

படிப்பதற்கும், எழுதுவதற்கும், கணக்கிடுவதற்கும் தரப்படும் பயிற்சிகள், நம் குழந்தைகளை மனிதப்பிறவிகளாக உருவாக்கவேண்டும். அது மட்டுமே முக்கியம்.

ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5ம் தேதி, அன்னை தெரேசா அவர்கள் இவ்வுலகைவிட்டு விடைபெற்ற நினைவு நாளும் சிறப்பிக்கப்படுகிறது. புனித அன்னை தெரேசாவின் திருநாள், அகில உலக பிறரன்பு நாள் என, ஐ.நா. அவையால், 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மனிதாபிமானம் என்ற கல்வியை உலகெங்கும் சொல்லித்தந்த உன்னத ஆசிரியரான புனித அன்னை தெரேசாவுக்கு நம் உளம் நிறைந்த நன்றிகள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 14:56