சுகில் அப்பாஸ், மாற்றுத்திறனாளர் இறகுப்பந்து விளையாட்டு வீரர் சுகில் அப்பாஸ், மாற்றுத்திறனாளர் இறகுப்பந்து விளையாட்டு வீரர் 

இமயமாகும் இளமை – ஒரு கையால் உலக சாதனை

விளையாட்டு வீரர்களுக்கே உரிய உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு அனைத்தையும் கொண்டு, பரபரவென்று தீயைப்போல பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார் சுகில் அப்பாஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

இன்று இந்தியாவின் மாற்றுத்திறனாளர் இறகுப்பந்து விளையாட்டில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர் சுகில் அப்பாஸ். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுகில் அப்பாஸ் அவர்களுக்கு, பிறக்கும்போதே இடது கை இல்லை. எனவே, வலது கையால் தன்னுடைய பதின்ம வயதில் இறகுப்பந்து விளையாடத் தொடங்கினார். சிறிது சிறிதாக, மாநில அளவு, தேசிய அளவு என்று ஆரம்பித்த இவரது பயணம், இந்தோனேசியா, உகாண்டா, இஸ்பெயின், ஆசிய விளையாட்டுப் போட்டி என்று விரிந்தது. இன்று பன்னாட்டு அளவில் இரண்டு வெண்கலப்பதக்கங்கள், மூன்று வெள்ளிப்பதக்கங்கள் என்று சாதனைகள் புரிந்துகொண்டிருக்கிறார் சுகில். பத்தொன்பது வயதில் தொழில்முறை விளையாட்டு வீரராகக் களமிறங்கிய சுகில் அவர்கள், கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்தது. இவரது குடும்பம், பொருளாதார அளவில் பின்தங்கியதுதான். மாற்றுத்திறனாளி என்றாலும், மனம் தளர்ந்து போகாமல், தனியார் இறகுப்பந்து வகுப்புகளில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்து, அதன்மூலம் ஆறாயிரம், ஏழாயிரம் என மாதந்தோறும் பெற்று, தனது குடும்ப நிலைமையைச் சமாளித்து வந்துள்ளார். தேசிய அளவில் விளையாடும்போது, சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகிய வீரர்களை உருவாக்கிய கோபிசந்த் அகாடெமியில் பயிற்சி பெற சுகில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கும் பல மாதங்கள் போராட வேண்டி இருந்துள்ளது. முதலில் அங்கு பயிற்சிக்கட்டணம் பெறப்பட்டாலும், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வெல்ல ஆரம்பித்தபின், சுகில் அவர்களுக்கு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பன்னாட்டு தரவரிசையில் தற்போது 16வது இடத்துக்கு முன்னேறியிருக்கும் சுகில் அவர்கள், அக்டோபர் மாதம் டென்மார்க்கிலும்,  நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிலும் நடக்கவிருக்கும் சர்வதேசப் போட்டிக்கும் செல்ல வேண்டுமாம். 2020-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவிருக்கும் மாற்றுத்திறனாளர் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே சுகில் அவர்களின் பெருங்கனவு. மாற்றுத்திறனாளர் போட்டிகளுக்குத் தகுதியுடைய சுகில் அவர்கள், உலக அளவில் நடைபெறும் பதினான்கிற்கும் மேற்பட்ட போட்டிகளில் இன்னும் பங்குபெற்றாக வேண்டும். ``குறைந்தபட்சம், ஒரு வருடத்துக்கு ஆறு சர்வதேசப் போட்டிகளிலாவது பங்கேற்றால் மட்டுமே மாற்றுத்திறனாளர் போட்டியில் தகுதி பெறமுடியும். இவ்வருடம் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில் 2-ல் மட்டுமே பங்கேற்றுள்ளார் இவர். மீதி இரண்டு போட்டிகளுக்குச் செல்ல நிதியுதவி கிடைக்கவில்லை என்கிறார் சுகில். (விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2018, 13:50