Cerca

Vatican News
பெரு நாட்டில் சிறார் கதைகள் பெரு நாட்டில் சிறார் கதைகள்  (AFP or licensors)

இமயமாகும் இளமை – கடும் நோயாளரின் நம்பிக்கை

இன்றைக்கு நான் மகிழ்வாக இருக்கிறேன், நாளையைப் பற்றிய கவலை எதற்கு என்று சொல்பவர், சோர்வுறும் நேரங்களில் உற்சாகத்தைப் பிறப்பிப்பவர், மஸ்குலர் டிஸ்ட்ரபி' நோயாளர் நா.இரமேஷ்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு நாள் சிறுவன் ஒருவன், மழையில் நனைந்துகொண்டிருந்த ஒரு பெரியவரைப் பார்த்ததும், தன் கையில் இருந்த குடையைக் கொடுத்து தாத்தா, வீட்டிற்கு நனையாமல் செல்லுங்கள் என்று சொல்ல, தாத்தாவும், ‛மழைவிட்டதும் வீட்டில் கொண்டுவந்து தருகிறேன்' என்று சொல்லி குடையுடன் சென்றார். ஆனால், மழை நின்று சில நாள்கள் ஆகியும், குடையை தாத்தா திருப்பிக் கொடுக்கவில்லை. திடீரென ஒரு நாள் அந்த சிறுவன் தாத்தாவை தேடி வந்தான். தாத்தா குற்றஉணர்வோடு நின்றார். அந்தச் சிறுவன் புதுக்குடை ஒன்றை தாத்தாவிடம் கொடுத்து,‛ உங்களிடம் நான் கொடுத்தது பழைய குடை அதில் மழை நீர் ஒழுகும், இந்தாருங்கள் புதுக்குடை' என்று தந்துவிட்டு நடந்தான். ‛ஈகை' என்ற தலைப்பிலுள்ள இந்த நீதி்க்கதையில் சிறாரே, எப்போதெல்லாம், எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள் என்ற குறிப்பு உள்ளது.  இக்கதையை எழுதியுள்ளவர், மஸ்குலர் டிஸ்ட்ரபி' எனப்படும், தசை திசை நோயாளரான நா.இரமேஷ் அவர்கள். 27 வயது வரை மகிழ்வாக, சராசரியான இளைஞராக உலாவந்த, எளிய குடும்பத்தின் இளைஞரான இவர், சொந்த தொழில் செய்து வயதான பெற்றோரை தெய்வமாக மதித்து காப்பாற்றி வந்தார். ஆனால் இந்நோயால் தாக்கப்பட்ட பின்னர், மரணம் எப்போதும் வரலாம் என்ற நிலையிலும், நல்ல சிந்தனையும் எழுத்தாற்றாலும் மட்டும் இன்னும் இவரைப் பாதிக்காமல் இருக்கின்றன. நன்னெறியை மையப்படுத்தி பண்பாட்டை வலியுறுத்தி, குழந்தைகளுக்கென, சின்ன சின்ன கதைகளை இவர் எழுதி வருகிறார். இவை பிரசுரமாவதன் மூலம் வரும் வருமானத்தில்தான் தன்னையும் பார்த்துக்கொண்டு, வயதான பெற்றோர்களையும் பராமரித்துக் கொண்டு வருகிறார். சிறார்க்கென எழுதும் கதைகளை தொகுத்து, நம்ம ஊரு கதைகள் என்ற தலைப்பில், முதல் இரு பகுதிகளை நூல்களாக வெளியிட்டுள்ளார் இரமேஷ். அதன் தொடர்ச்சியாக இப்போது பகுதி மூன்றையும் வெளியிட்டுள்ளார். இதில் சிறார்க்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நீதிக்கதைகள் சொல்லியிருக்கிறார். இவர் எழுதியுள்ள கதைகளில் குரங்கு, முதலை, சிங்கம், நரி, கிளி, கரடி மட்டுமல்ல, ஒட்டடைக்குச்சியும் விளக்குமாறும்கூட பேசும், நீதி சொல்கின்றன. நா.இரமேஷ் அவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும் எந்த குழந்தையும் நி்ச்சயம் பெற்றோரை அன்புகூர்வர், மறந்தும் சிறு தவறு செய்யக்கூட தயங்குவர் என்று செய்திகள் கூறுகின்றன. பழனியில் வாழ்ந்தவர் வாடகை கொடுத்து கட்டுப்படியாகததால் பக்கத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறாராம். (தினமலர்)

இந்நோயாளரால் நடக்க முடியாது, விழுந்தால் கை ஊன்றி எழ முடியாது, எங்கே போனாலும் ஊர்ந்து ஊர்ந்துதான் போகவேண்டும். உடல் எடை கூடிக்கொண்டேபோய் படுக்கயைிலே இருக்க நேரிடும், நாளாக நாளாக உடல் உறுப்புகளை, ஒவ்வொன்றாக தின்றுகொண்டே இருக்கும்.

17 September 2018, 15:15