தேடுதல்

Vatican News
காஷ்மீரைச் சேர்ந்த முதல் இஸ்லாமிய பெண் விமான ஓட்டுனர் காஷ்மீரைச் சேர்ந்த முதல் இஸ்லாமிய பெண் விமான ஓட்டுனர்  

இமயமாகும் இளமை : காஷ்மீர் முதல் இஸ்லாமிய பெண் பைலட்

இந்தியாவின் காஷ்மீரைச் சேர்ந்த முதல் இஸ்லாமிய பெண் விமான ஓட்டுனர் இராம் ஹபீப் அவர்கள், வருகிற அக்டோபரில் பணியில் சேரவுள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த ஐம்பது முஸ்லிம் பெண்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

முப்பது வயதான இராம் ஹபீப் (Iram Habib) அவர்கள்தான், இந்தியாவின், காஷ்மீரைச் சேர்ந்த முதல் இஸ்லாமிய பெண் விமான ஓட்டுனர். இவர், வருகிற அக்டோபரில், இந்தியாவில், தனியார் விமான நிறுவனத்தில், விமான ஓட்டுனராகப் பணியில் சேர உள்ளார். 2016ம் ஆண்டில், தனது விமானப் பயிற்சியை அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமி நகரில் முடித்துள்ள இவர், தற்போது டெல்லியில், வர்த்தக விமான ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காகப் படித்துக்கொண்டிருக்கிறார். மிகவும் கண்டிப்பான காஷ்மீர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இராம் ஹபீப் அவர்கள், விமான ஓட்டுனராவதற்கு, கடந்துவந்த பாதை ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில், பட்டமேற்படிப்பு படித்தார். ஆனால், விமான ஓட்டுனராக வேண்டும் என, சிறுவயது முதலே இருந்த கனவை நனவாக்க விரும்பி, வனயியலில் முனைவர் பட்டம் பெறும் வாய்ப்பைத் துறந்து, அமெரிக்கா சென்று விமான ஓட்டுனராகப் படிப்பைத் தொடர்ந்தார். இந்தப் படிப்பு பற்றி ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ள, இராம் ஹபீப் அவர்கள், தேர்வில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைத்தேன், அமெரிக்காவில் 260 மணி நேரங்கள் விமான ஓட்டுனர் பயிற்சி செய்தேன், இந்த அனுபவம், இந்தப் பணிக்கு உரிமம் பெறுவதற்கு மிகவும் முக்கியம், அமெரிக்காவிலும் கானடாவிலும், வர்த்தக விமானத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது, ஆனால், இந்தியாவில், வேலை செய்ய விரும்பினேன், தற்போது IndiGo மற்றும் GoAir விமான நிறுவனங்களில், வர்த்தக விமான ஓட்டுனராக வேலை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர், 2016ம் ஆண்டில், காஷ்மீர் பிராமின் வகுப்பைச் சேர்ந்த தன்வி ரய்னா (Tanvi Raina) அவர்கள், காஷ்மீரின் முதல் பெண் விமான ஓட்டுனராக ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்தார். காஷ்மீரைச் சேர்ந்த, 21 வயது Ayesha Aziz அவர்கள், கடந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியாவின் மிக இளம் வயது விமான ஓட்டுனர் மாணவர் என்ற பெயரைப் பெற்றார்.

10 September 2018, 15:10