தேடுதல்

Vatican News
கைத்தறி கைத்தறி 

இமயமாகும் இளமை : அன்பால் ஒரு கண்டுபிடிப்பு

நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு, எளிய தீர்வுகளைக் கண்டறிந்தாலே, பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் - தினேஷ், உலகபுரம்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, உலகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர், மின்சாரம் இல்லாமல் இயங்கும் விசிறியைக் கண்டுபிடித்துள்ளார். சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்த இவர் அம்மா மற்றும் தாத்தா உதவியுடன் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்று, தற்போது, ஈரோட்டில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார்ன். இவரின் அம்மா மற்றும் தாத்தா இருவருமே கைத்தறி நெசவாளர்கள். கைத்தறி தொழில் தான், இக்குடும்பத்தின் வாழ்வாதாரம். சிறுவயது முதலே இவரது குடும்பம், நாள் முழுவதும் வியர்வை சிந்தி, கைத்தறி நெய்ய கஷ்டப்படும் சூழ்நிலையைப் பார்த்தபடி வளர்ந்தார். தினமும் கைத்தறி நெய்வதன் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானம், மின்விசிறியின் மின்சார செலவுக்கே போதாது. மேலும், மின் கசிவு ஏற்பட்டால், கைத்தறி துணிகளில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடிவு செய்தார். இது, வருங்காலத்தில் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்றும் சிந்தித்தார்; அதன் வெளிப்பாடே, இந்த கைத்தறி விசிறி. கைத்தறி நெய்வதன் மூலம் உருவாகும் நேர்விசையை, சுழற்சி விசையாக மாற்றும் தத்துவத்தின் அடிப்படையில், இது செயல்படுகிறது. இந்த விசிறி தயாரிக்க, 'விசிறி எக்சில் பயரிங்', 'ஸ்டாண்டு' ஆகிய இரண்டு பாகங்களும் போதுமானவை. இதற்கு மின்சாரம் வேண்டாம்; இரைச்சல் இருக்காது; எளிதானது; மிதமான காற்று பரிமாற்றம் செய்யும்; இதைப் பராமரிப்பதும் எளிது. அறிவால் மட்டுமல்ல, தனது குடும்பம் மீதான அன்பாலும் உண்டான கண்டுபிடிப்பு இது என்கிறார் தினேஷ். நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு, எளிய தீர்வுகளைக் கண்டறிந்தாலே, பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். பிரச்சனைக்குப் பதில் தேடுவதை விட்டுவிட்டு, அதற்கான தீர்வை கண்டுபிடிக்க, முயற்சி செய்தால், அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதோடு, அது பலருக்கு பயனுள்ளதாய் அமையும். நாம், அனைத்து தேவைகளுக்கும், அடுத்தவர்களைச் சார்ந்திராமல், நாம் படித்த கல்வியை, நம் சிந்தனையை, மற்றவர்களுக்கும் பயன்படும் வண்ணம் பயன்படுத்தினால், கண்டுபிடிப்புகள் கைகூடுவது எளிதில் சாத்தியம்தான் என்றும் தினேஷ் அவர்கள் சொல்கிறார். (தினமலர்)

26 September 2018, 15:18