ஜம்மு-காஷ்மீர் பகுதியில் படைவீரர் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் படைவீரர் 

இமயமாகும் இளமை : கடவுளின் கரம் நம்முடனே

கடவுள் இருக்குமிடத்தில் இயலாதது என்று எதுவுமில்லை. நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்வேளையில், கடவுள் அவ்விடத்தில் இருந்து வேலை செய்கிறார், நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை ஒருபோதும் மறவாதிருப்போம்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு சமயம், கடும் தோல்வியைத் தழுவிய அந்த நாட்டின் படைவீரர்கள், எதிரிப் படைகளிலிருந்து தப்பிப்பதற்காக விரைந்து ஓடிக்கொண்டிருந்தனர். அவ்வேளையில், ஓர் இளம் வீரர், தனது சக வீரர்களிடமிருந்து பிரிந்துவிட்டார். இவரை எதிரிப் படைகள் துரத்திக்கொண்டுவர, இவரும் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் களைப்புற்றார். அதேநேரம், பகைவர்கள் தன்னை நெருங்கி வந்துகொண்டிருப்பதையும் அவர் பார்த்தார். அங்கே ஒரு பழைய கைவிடப்பட்ட ஒரு வீடு தெரிந்தது. வேகமாக ஓடி அதற்குள்ளே இருந்த ஓர் இருட்டறையில் தவழ்ந்து தவழ்ந்து சென்று ஒளிந்து கொண்டார். அந்த நேரத்துக்குப் பாதுகாப்பாக உணர்ந்தாலும், எதிரிகள் அந்த வீட்டைக் கண்டுபிடித்துவிட்டால் தான் பிடிபட்டு கொல்லப்படுவது நிச்சயம் என அஞ்சினார். நிர்க்கதியான நிலையில், கடவுளிடம் மன்றாடினார். ஆண்டவரே என்னைப் பாதுகாத்தருளும், எனது வாழ்வு உமது கரங்களில் உள்ளது. ஆயினும் உமது விருப்பம் நிறைவேறட்டும். நான் உம்மை அன்பு கூர்கிறேன், உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் என்று உருக்கமாகச் செபித்தார், அந்த இளம் படைவீரர். அவர் செபித்து முடித்தவேளையில் ஒரு சிலந்தி அவர் ஒளிந்து கொண்டிருந்த அறையின் நுழைவாயிலில் வலைபின்னத் தொடங்கியது. நுழைவாயில் முழுவதும் அது வலைபின்னியது. துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளிலிருந்து காப்பாற்றுமாறு ஆண்டவரை மன்றாடினேன், ஆனால் ஆண்டவரோ, என்னைக் காப்பாற்றுவதற்கு இந்த சிறிய சிலந்திப் பூச்சியை அனுப்பியிருக்கிறார் என்று அந்த இளம்படைவீரர் நினைத்தார். எதிரிப் படைவீரர்கள் அந்த வீட்டைக் கண்டுபிடித்து அங்கு நுழைந்து ஒவ்வோர் அறையாகத் தேடினார்கள். ஆனால் அவர் ஒளிந்திருந்த அறையில் நுழைவதற்கு வந்தபோது, அவர்கள் அவ்விடத்திலே நின்று, இந்த அறைக்குள் யாரும் நுழைந்திருக்க முடியாது என்று கூறிவிட்டு, அங்கு நுழையாமல், வேறு இடங்களில் அவரைத் தேடச் சென்று விட்டனர். ஏனெனில், அவர்கள் அங்கே நுழையவேண்டுமெனில் அந்த சிலந்திவலையை கிழித்துத்தான் உள்ளே நுழைய வேண்டும். வியப்பில் ஆழ்ந்த அந்த இளம் படைவீரர், முழங்காலிலிருந்து ஆண்டவருக்கு நன்றி சொன்னார். தனது நம்பிக்கையின்மைக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2018, 15:03