தேடுதல்

Vatican News
இந்திய தேசிய கொடி இந்திய தேசிய கொடி  (AFP or licensors)

இமயமாகும் இளமை …,: மரணப் படுக்கையிலும் நாட்டிற்காகப் போராடியவர்

அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்ற வழக்கை இலவசமாக வாதிட்டு, அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் விடுதலையைப் பெற்றுத் தந்ததால், ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி உருவாக காரணமாக இருந்தவர், வழக்கறிஞர் சித்தரஞ்சன் தாஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எட்டாம் எட்வார்ட் என்ற பெயரில் அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர், இந்தியாவிற்கு வருகை தந்தபோது, கல்கத்தாவிற்கு பயணம் செய்தார். அந்நாட்களில், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக, நீதி மன்றத்தில் வாதாடி, அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த, நாட்டுப்பற்று மிக்க வழக்கறிஞர் ஒருவர், கல்கத்தா பகுதியில் இருந்தார். அவர், கல்கத்தாவில், வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்கும் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர், கல்கத்தாவில் நுழைந்த பொழுது, அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும், அவரை வரவேற்க, ஒருவர் கூட இல்லை. இந்தப் புறக்கணிப்பை முழுமையாக வெற்றி பெறச் செய்தவர், தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.

அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின், அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்ற வழக்கை ஒருவரும் வாதிட முன்வராத நிலையில், நாட்டுப்பற்று மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக்கொண்டார். எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. வழக்கறிஞர் சித்தரஞ்சன் தாஸ், தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்தது மட்டுமல்லாமல், அதற்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால், நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.

இந்த வழக்கறிஞர் மரணப் படுக்கையிலிருந்தபோது, பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க, தன்னை படுக்கையிலேயே நீதிமன்றத்துக்கு எடுத்து செல்ல கேட்டுக்கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்த சுதந்திரப் போராட்டத் தலைவர், இங்கிலாந்தில் சட்டக் கல்வி கற்றவர், மற்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு. சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும், சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர், சித்தரஞ்சன் தாஸ்.

28 September 2018, 15:51