இந்திய தேசியக் கொடியுடன் மாணவிகள் இந்திய தேசியக் கொடியுடன் மாணவிகள் 

இமயமாகும் இளமை : தேசியக் கொடி நாட்டிய இள மங்கை

நாட்டின் மீது பற்று கொண்டு, கொடி தாங்கி போராடியதால், நாட்டிற்குத் திரும்பவிடாமல் தடுக்கப்பட்டாலும், அங்கிருந்தே சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடுபட்ட பெண்மணி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1907ம் ஆண்டில், இந்திய சோஷலிசக் கூட்டம், ஜெர்மனியின் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பெண்மணி, அப்போது வடிவமைக்கப்பட்டிருந்த இந்தியாவின் தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து, அந்த இடத்தில் கொடியைப் பறக்கவிட்டார். இந்தியக் கலாசாரத்தை வெளிப்படுத்தும் புடவை உடுத்தி, கூட்டத்திற்கு நடுவே முன்னேறி வந்த அப்பெண், "எல்லோரும் பாருங்கள், இதுதான் இந்தியத் தேசியக் கொடி, நமது சுதந்திரக் கொடி. இது பல இளையோரின் தியாகத்தாலும், அவர்கள் சிந்திய இரத்தத்தாலும், நெய்யப்பட்டிருக்கிறது, இதை வணங்குங்கள், இந்தக் கொடிக்கு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்" என்று, வீரத்துடன், வெற்றி நடை நடந்து, பெருமையாக அதை நாட்டினார். அங்கு கூடியிருந்த அனைவரும், வியப்பால் கட்டுண்டவர்கள் போல், எழுந்து நின்று, அந்தக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். இந்த துணிச்சல் மிகுந்த, தேசப்பற்று நிறைந்த அம்மையார்தான், மேடம் காமா என்றஅழைக்கப்பட்ட பிக்காய்ஜி ரஸ்டம் காமா.

மேடம் காமா, குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் 1861ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி பிறந்தார்.  அவர், திருவாளர் ருஸ்டம் காமா என்ற பெரிய செல்வந்தரை மணந்துகொண்டார். நாட்டின் மீது கொண்ட பற்றால், தேச சேவைச் செய்ய முனைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தேசப்பற்று மிக்க பல புத்தகங்கள் வெளியிட்டார். தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் கொடுத்து உதவினார். ஆங்கிலேயருக்கு இவரால் மிகுந்த தலைவலி உண்டாயிற்று. இவர் ஜெர்மனி போய் திரும்பி வருவதற்குள், ஆங்கிலேயர் அவரைக் கொல்ல முயற்சித்ததால், தப்பியோடி பிரான்ஸ் சென்றார். அங்கிருந்தே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடுபட்டார். இந்தியாவிற்கு வர முயன்றும் அனுமதி கிடைக்காததினால் அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியிருந்தது. வயது முதிர்ந்தபின், பாரதம் திரும்பினார். ஆனால் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. 1936 ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி  காலமானார்.

அவர் வீர தீரத்துடன் நாட்டிய கொடியை இந்திலால் யாக்னிக் என்பவர் குஜராத்திற்கு எடுத்து வந்தார். இப்போது அது, பூனாவில் மராத்தா புத்தகாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2018, 15:50