Cerca

Vatican News
அநாதை உடல்களை நல்லடக்கம் செய்யும் அய்யாசாமி அநாதை உடல்களை நல்லடக்கம் செய்யும் அய்யாசாமி 

வாரம் ஓர் அலசல் – இப்படியும் இதயம் உள்ள மனிதர்கள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, அன்னை தெரேசா அவர்கள் இறைபதம் எய்திய செப்டம்பர் 5ம் நாளை, பிறரன்பின் உலக நாளாக, 2012ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அறிவித்து, ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகிறது

மேரி தெரேசா - வத்திக்கான்

கிரிக்கெட் வீரர் Navjot Singh Sidhu பகிர்வு

1991-92ம் ஆண்டுகளில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் இந்தப் போட்டி நடந்தபோது, அன்னை தெரேசாவைக் கட்டாயம் சந்திக்க வேண்டும்.. அவர் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாக வேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அந்நகரிலுள்ள அன்னை தெரேசா சபையினர் இல்லத்திற்குச் சென்றேன். அங்கே இருந்த அருள்சகோதரிகளிடம் ‘அன்னை எங்கே?’ என்று கேட்டேன். தங்களது வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கட்டடத்திற்கு, அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த இடத்திலிருந்து, சகிக்க இயலாத துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. அழுகிக்கொண்டிருக்கும் சதையிலிருந்து வருவதுபோன்ற அந்த நாற்றத்தின் நெடி குமட்டலை வரவைத்தது. அதைச் சகித்துக்கொண்டு அந்த சிறிய சந்தின் வழியாக நான் நடந்து சென்று, ஓர் அறையை அடைந்தேன். அங்கேதான் முதன்முதலாக அன்னைத் தெரேசாவைக் கண்டேன். நீண்ட தலைமுடியைக் கொண்ட ஒரு மனிதர் அங்கே படுக்கவைக்கப்பட்டிருந்தார். அவரது உடலில் ஆடை எதுவும் காணப்படவில்லை. ஒரு துணி மட்டும் அவரது இடுப்பின் கீழே போர்த்தப்பட்டிருந்தது. அவர் உடல் முழுவதும் அழுகி, புண்களிலிருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. அன்னை, மிகுந்த அன்புடன், அந்தப் புண்களில் வழிந்துகொண்டிருந்த சீழை ஒரு துணியினால் துடைத்துக்கொண்டிருந்தார். அந்த மனிதரின் உடலிலிருந்து வந்த நாற்றம் என் குடலைப் புரட்டியது. ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. அந்தக் கட்டடத்தினுள் இருந்து நான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தேன். அங்கிருந்த சாக்கடையில் பெரும் குமட்டலுடன் வாந்தியெடுத்தேன்.  பத்து நிமிடங்கள் கழித்து, அன்னை தெரேசா அவர்கள், என்னிடம் வந்தார். புன்னகையுடன், ‘Yes My Son’ என்றார். பின்னர் நான் அன்னை பின்னாலே சென்று, அவரது அறைக்குள் நுழைந்தேன். நான் மனம் நிறைய கர்வத்துடன், என் சட்டைப்பையிலிருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து, அங்கிருந்த மேஜையின் மேல் வைத்தேன். அவரை வணங்கி, ‘அன்னையே, நான் கொடுப்பதை தாங்கள் ஏற்றுக்கொண்டால் நான் உண்மையிலேயே மகிழ்வேன்’ என்றேன். அன்னை அவர்கள், புன்னகைத்தவாறு, ‘மகனே, எனக்கு உனது பணம் தேவையில்லை. உனது நேரம்தான் தேவை. இந்த மக்களோடு நேரம் செலவழிக்க உன்னால் முடியுமா? சில நாள்கள் தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. இவ்வுலகில் இப்படி நல்உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கின்றார்களா? நான் கொடுக்கும் பணத்தை மறுத்து, என்னை வந்து இந்த நோயாளர்களுடன் நேரம் செலவிடச் சொல்கிறாரே?’ என்று உறைந்து போனேன். அந்த நாற்றத்தினுள் இரண்டு நிமிடங்கள் நிற்கக்கூட என்னால் இயலவில்லை. நான் எங்கிருந்து அவர்களுக்கு சேவை செய்வது? அந்த நிகழ்வு எனது வாழ்வை மாற்றியது. பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம் என்ற என் எண்ணம் அன்று சுக்குநூறாகிப் போனது. பணத்தைவிட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை என்று, அன்னை தெரேசா அவர்கள், அன்று எனக்கு உணர்த்தினார்.

புனித அன்னை தெரேசா அவர்கள் பற்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர் Navjot Singh Sidhu அவர்கள் பகிர்ந்துக்கொண்ட சாட்சியம் இது.

“அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அதைச் சொற்களால் விளக்கவும் முடியாது, அது செயல்களால் விளக்கம் பெறுகிறது. நாம் இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” என்று சொன்னவர், பிறரன்பின் அன்னை, புனித அன்னை தெரேசா. அன்னை என எல்லாராலும் அன்போடு அழைக்கப்படும் இவர், 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள், தனது 87வது வயதில் கொல்கத்தாவில் இறைவனடி சேர்ந்தார்.

உலக பிறரன்பு நாள்

நாடுகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளையும், மனிதத் துன்பங்களையும் அகற்றுவதில், அன்னை தெரேசாவின் பணிகள் உட்பட, உலகில் பிறரன்பு அமைப்புகள் மற்றும் தனியாட்கள் ஆற்றும், அளப்பெரும் சேவைகளை அங்கீகரிக்கும் முறையில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ம் ஆண்டு டிசம்பரில், உலக பிறரன்பு நாளை உருவாக்கியது. அன்னை தெரேசா அவர்கள் இறந்த செப்டம்பர் 5ம் நாளையே இந்த உலக நாளாகவும் ஐ.நா. அறிவித்தது. ஹங்கேரி நாட்டின் பரிந்துரையின்பேரில் உருவாக்கப்பட்ட இந்த உலக நாளில், உலகில் பிறரன்புப் பணிகளை ஆற்றுவோரை ஊக்குவிக்கவும், மேலும் பலர் இத்தகைய பணிகளில் தங்களை ஈடுபடுத்தவும் ஐ.நா. அழைப்பு விடுக்கிறது. உலகில் பல்வேறு பகுதிகளில், வெளிப்படையாகத் தெரிந்தும் தெரியாமலும், எத்தனையோ அன்னை தெரேசாக்கள், பிறரன்புப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அன்னை தெரேசா அவர்கள் போன்று, பல்வேறு நாடுகளுக்கும் சென்று சேவை செய்யாவிட்டாலும், அந்தந்த இடங்களில் சிறிய அல்லது, பெரிய அளவில் தங்களால் இயன்ற நற்பணிகளை, இவர்கள் ஆற்றி வருகின்றனர். 

விஸ்வாஜெயம் தொண்டு நிறுவனம்

சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகச்சை பிரிவில், ஏழை எளிய நோயாளர்கள் புழங்கக்கூடிய கழிப்பறைகளை, கருவறை போல சுத்தம் செய்யும் மகத்தான பணியை, விஸ்வாஜெயம் எனப்படும் தொண்டு நிறுவனம், இலவசமாகச் செய்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சேகர் விஸ்வநாதன் அவர்கள், தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர். விஸ்வநாதன் அவர்கள் இச்சேவை பற்றி ஊடகங்களிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறார். எனக்குத் தெரிந்த ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைப் பார்ப்பதற்காகச் சென்றபோது மருத்துவமனையின் சுற்றுச்சுழல் சொல்லிக்கொள்வதுபோல இல்லை. மற்ற நோயாளர்களைவிட புற்றுநோயாளர்கள், சுத்தமான சூழலில் இருக்கவேண்டியது அவசியம் என்ற நிலையில், இங்கு நிலைமை நேர்மாறாக இருக்கிறதே? என்று மனம் வருந்தினேன்.  மறுநாளே தீர்க்கமான முடிவு எடுத்து, மருத்துவமனையின் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கான பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டேன். எனது மாத வருமானத்தில் இருந்தும், கையிருப்பில் இருந்தும் பணத்தைப் போட்டு கடந்த 2012ம் ஆண்டில் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றேன். ஒரு நாளைக்கு எட்டு முறை கழிப்பறைகளும், தரைப்பகுதியும், நோயாளர்கள் புழங்கும் வார்டு அறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. பதினைந்து ஊழியர்கள், சுழற்சி முறையில், ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். சுத்தம் செய்ய, சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. (தினமலர்)

அநாதை உடல்கள் நல்லடக்கம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்டு உயிரிழப்பவர்கள், விபத்தில் இறந்துபோன அடையாளம் தெரியாதவர்கள்... இப்படி எத்தனையோ ஆதரவில்லாதவர்களின் உடல்களின் இறுதிப் பயணத்துக்குத் தோள்கொடுத்து உதவி வருபவர். `நாங்கள் இருக்கிறோம்’ என்ற வாட்ஸ்அப் குழுவை ஆரம்பித்து, அதன் வழியாக, பலருக்கும் உதவி வருகிறார் இவர். டெல்லியில், ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர் இவர். ஒரு கட்டத்தில், நான் யார்? இந்த உலகத்தில் யாருக்காக, என்ன செய்கிறேன்? ஏன் வாழ்கிறேன்? வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?  போன்ற பல கேள்விகள், அவரைத் துளைக்க ஆரம்பிக்க, டெல்லியில் வேலையைவிட்டுவிட்டு, மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் வேலை கிடைத்துள்ளது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், நான் யார் என்ற அந்தக் கேள்வி மட்டும் அவரைத் துரத்திக்கொண்டே இருந்துள்ளது. ஆன்மிகம் தொடர்பாக நிறைய நூல்கள் வாசிக்கும் பழக்கமுடைய இவர், அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வது, நூறு அஸ்வமேத யாகம் நடத்துவதற்குச் சமம்’ என்று புரிந்துகொண்டுள்ளார். மேலும், அய்யாசமி அவர்கள் சொல்கிறார்...“இந்த பூமியில் பிறந்த யாருமே அநாதை இல்லை. அப்படியிருக்க, ஏன் சிலர் மட்டும், இறந்த பிறகு அநாதை ஆகவேண்டும் என சிந்தித்தேன். அந்த நேரத்தில்தான் கடலூர் மாவட்டத்தை `தானே’ புயல் தாக்கியிருந்தது. ஒரு மீட்பு முகாமுக்குப் போயிருந்தேன். அங்கே அநாதைப் பிணங்களுடைய உண்மையான நிலைமையைப் பார்த்தேன். அது, என் மனதை அதிகம் பாதித்தது. நான் யார்? என்ன செய்ய வேண்டும்? என்று எனக்குள்ளே ஒரு தெளிவு வந்தது. இனி, அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வது என்னுடைய சமூகப் பணி’ என்று  எனக்கு நானே உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். இதுவரை 75 பேரை நல்லடக்கம் செய்திருக்கிறேன்..” (விகடன்)

இந்த உலகத்தில் ஒரு மனிதர் அனுபவிக்கும் மிகப் பெரிய வலி புறக்கணிப்பு. தோள் சாய உறவுகள் இல்லை என்றால், அந்த வாழ்க்கை வெறுப்பு தட்டிவிடும். அன்பு, அரவணைப்பு, பாசம், நட்பு, தோழமை இவற்றையெல்லாம் காசு கொடுத்து வாங்க முடியாது. சமூகத்தை மாற்றுபவர்கள் மாமனிதர்கள். சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முயல்பவர்கள், அன்புக்குரிய மனிதர்கள். புனித அன்னை தெரேசா அவர்கள் சொன்னதைப் போன்று, உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வைப்போம். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களில் ஒருவராக வாழ்ந்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.

இப்படியும் இதயம் உள்ள மனிதர்கள்
03 September 2018, 13:51