கர்நாடக மாநிலத்தில் காட்டில் வேலைசெய்யும் யானை கர்நாடக மாநிலத்தில் காட்டில் வேலைசெய்யும் யானை 

இமயமாகும் இளமை : தனி மனிதர் உருவாக்கிய காடு

விலங்கினங்களுக்கு புகலிடம் கொடுக்கும் ஆவலில், தனி மனிதனாக, 30 ஆண்டுகளில், 1,360 ஏக்கர் காட்டை உருவாக்கிய சாதனை மனிதர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 1979ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாம்புகள், பிரம்மபுத்திரா நதியின் மணல் படுகையில் ஒதுங்கி, வெள்ளம் வடிந்தபின் நிழலற்ற அம்மணல் திட்டின் வெப்பம் தாழாமல் கருகி இறந்து கிடந்ததை காணப் பொறுக்காமல், எந்தவிதமான தாவரங்களும் வளரும் சாத்தியமற்ற அம்மணற்பரப்பை நிழல்தரு சோலையாக மாற்றும் நோக்கில் யாதவ் பாயேங் என்ற இளைஞர் ஆரம்பித்ததுதான் ஒரு மாபெரும் மாற்றத்துக்கான அடித்தளமாகியது.

வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க ஆரம்பத்தில் மூங்கில் பற்றைகளை அவ்விடத்தில் வளர்க்க ஆரம்பித்த பாயேங் அவர்கள், சிறிது சிறிதாக அம்மண்ணை வளப்படுத்தி, ஏறத்தாழ 1,360 ஏக்கர் நிலப்பரப்பில், தனியொரு ஆளாக, ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார். அக்காட்டிலேயே அமைக்கப்பட்ட ஒரு குடிசையில் மின்சாரம், குடிநீர் வசதிகளுமின்றி, தான் வளர்க்கும் ஆடுமாடுகளின் பாலை விற்று, வாழ்வாதாரம் தேடி, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் அவர். தனது பதினாறாவது வயதில் ஆரம்பித்து, தொடர்ந்து முப்பது வருடங்கள் இக்காட்டின் உருவாக்கத்துக்காக செலவுசெய்தும், தனது பணி அத்தோடு முடியவில்லை, இன்னும் 30 வருடங்கள் இதுபோன்ற இன்னுமொரு காட்டை உருவாக்குவேன் என்று, தன்னம்பிக்கையுடன் கூறும் இம்மனிதர், 2008ம் ஆண்டுவரை இனங்காணப்படாமலேயே இருந்ததுதான் ஆச்சரியம்.

2008ம் ஆண்டு ஒரு காட்டிலிருந்து இடம்பெயர்ந்த 115 யானைகளைத் தேடி வனத்துறை அதிகாரிகள் வந்தபோதுதான், தங்கள் பதிவுகளிலேயே இல்லாத, இப்பெரும் காட்டைக் கண்டு வியந்துபோயினர். மரங்களே வளரும் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட இடத்தில், இன்று, தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி போன்ற மரங்களும், சிறுத்தை, யானை, மான்கள், எருதுகள் உட்பட ஆயிரக்கணக்கான விலங்குகளும் வாழ்கின்றன.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல், எந்தவித வெளி ஊக்கமும் இல்லாமல், பொருளாதார பின்னணியும் இன்றி இவர் செய்த இச்சாதனை, மனிதகுலத்தைப் பெருமையடைய வைக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2015ம் ஆண்டு, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2018, 14:55