பார்வை இழந்தோருடன் திருத்தந்தை பார்வை இழந்தோருடன் திருத்தந்தை 

இமயமாகும் இளமை : பார்வையற்றவர்களுக்கு ஒரு கருவி

பார்வையற்றோர், யாருடைய உதவியும் இல்லாமல் மிக வேகமாக நடக்கவும், செயல்படவும் உதவும் புதிய கருவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பார்வைத்திறனை இழந்தவர்களுக்கு என அதிநவீன கருவி ஒன்றை 21 வயது அபிநவ் வர்மா என்பவர் உருவாக்கி உதவியுள்ளார். 30 கிராம் எடையுடன், ‘லைவ் பிரெய்லி’ எனப் அழைக்கப்படும் இக்கருவியை பார்வையற்றவர்கள் கையில் அணிந்துகொண்டு சென்றால், அது கொடுக்கும் சமிக்கைகளின் உதவியால் யாருடைய உதவியும் இல்லாமல் மிக வேகமாக, இயல்பாக நடக்கவும், செயல்படவும் முடியும். இக்கருவி 3.5 மீட்டர் தொலைவு வரை உள்ள பொருள்களை இனம் கண்டுகொண்டு, அணிந்து கொண்டிருப்பவருக்கு தொடு உணர்வு மூலம், சமிக்கைகளை அளிக்கிறது. கைகளில் காற்றை அலைந்தால்போதும், இக்கருவி சுற்றுப்புறத்தை உணர்ந்து கொள்கிறது. ஒரு பொருளின் நகர்வை ஒரு நொடிக்கு ஐம்பது முறை உணர்ந்துகொண்டு, அதிர்வு மற்றும் தொடு உணர்வுகளால் சமிக்கை தருகிறது. இதனால் பொருளின் தன்மை, அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது, எவ்வளவு வேகமாக நகர்கிறது என அனைத்தையும் பார்வையற்றவர் உணர்ந்து கொள்ள முடியும். 3.5 மீட்டர் தொலைவுக்குள் இருப்பது புத்தகமா, சுவரா, மனிதரா என்பதையும் உணர முடியும். சண்டீகரைச் சேர்ந்த அபிநவ் வர்மா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிக்காக இதனை முதன்முறையாக தயாரித்து காப்புரிமை பெற்றார். அதன்பின் தற்போது அதனை மிக நவீனமாக மேம்படுத்தியுள்ளார். சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இக்கருவி மூன்று மாதங்களுக்குள் 16 நாடுகளில் விற்பனையாகியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 16:02