தேடுதல்

கேரளாவில் மழை பாதிப்பு கேரளாவில் மழை பாதிப்பு 

இமயமாகும் இளமை : கேரள மக்களுடன் கைகோர்த்து உதவுவோம்

மற்றவர்களுக்கு வழிகாட்டி வாழவைத்தால் மட்டும் போதாது, அவர்களையும் வழிகாட்டிகளாக மாற்ற வேண்டியது, ஒவ்வொரு தலைவனின் கடமை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கேரளாவில் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேதங்களை கணக்கிட இன்னும் பல நாட்கள் ஆகலாம். இந்நிலையில், கேரளா மாநிலத்தில் தற்போது உணவு பாதுகாப்புத்துறை ஆணையராக இருக்கும் ஓர் ஐஏஎஸ் அதிகாரி செய்துவரும் பணி அனைவராலும் பாராட்டப்படுகிறது.

தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரிடமும் உணவு மறந்து, உறக்கம் துறந்து, பேசிப்பேசியே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களைச் சேகரித்தார் இந்த அதிகாரி. ஒரே இரவில் நான்கு லாரிகளில் கொண்டு போகுமளவிற்கு பொருட்கள் சேர்ந்தன. அதே இரவிலேயே வயநாடு பகுதிக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்காக இவரே தயாரித்த பெட்டிகளை முதுகிலும் தோளிலும் சுமந்தபடி லாரிகளில் ஏற்றினார். இதைப் பார்த்த இளைஞர்கள் இன்னும் வேகமாகச் செயல்பட, சில மணி நேரத்தில் லாரிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டன. இன்னும் நிறைய, அரிசி பருப்பு பாத்திரங்கள் தேவைப்படுகின்றன என்று இவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் இருந்து, குறிப்பாக, மதுரையில் இருந்து நிறைய உதவிகள் போய்க்கொண்டு இருக்கின்றன. இப்படி நிறைய மதுரைக்காரர்கள் இந்த ஐஏஎஸ் அதிகாரியின் அன்பு வேண்டுகோளுக்கு கட்டுப்படுகிறார்கள் என்றால், அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

கேரளா மக்கள் கொண்டாடும் அந்த ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் எம்.ஜி. இராஜமாணிக்கம். மதுரை மாவட்டம் மேலுார் வட்டம் திருவாதவூரைச் சார்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர் இவர். அவர் படித்த திருதாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தரத்தை உயர்த்த தனது வருமானத்தின் பெரும்பகுதியை செலவழித்து வருகிறார். மக்களுக்காக துணிச்சலுடன், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டுவரப்பட்ட பார்மலின் பூசப்பட்ட பல இலட்சம் மதிப்புள்ள மீன்களைத் தடுத்து திருப்பி அனுப்பியதன் வழியாக, நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர் இவரே.

இவர் ‛அன்போடு கொச்சின்' என்ற அமைப்பை துவக்கி, அதன் வழியாக, ஏாரளமான இளைஞர்களின் துணையோடு, ஏரி குளங்களைத் தூர் வாரி, அங்குள்ள மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

‛என்டகுளம் எர்ணகுளம்' என்ற அமைப்பை துவக்கி, அங்குள்ள இளைஞர்களின் துணையோடு விடுமுறை நாட்களில் இவர் சுத்தப்படுத்திய குளங்கள் ஏாராளம் ஏாராளம்.

இத்தனை புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரரான தமிழர் ராஜமாணிக்கம்தான் தற்போது வயநாடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  வேண்டுகோளை விடுத்து, செயலாற்றியும் வருகிறார்.(தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2018, 16:26