தேடுதல்

சிர்கோ மாஸ்ஸிமோ திடலில் இளையோர் சந்திப்பு சிர்கோ மாஸ்ஸிமோ திடலில் இளையோர் சந்திப்பு 

வாரம் ஓர் அலசல் – இளையோரின் கனவுகள் மெய்ப்பட...

கனவுகள் வளர வேண்டும், அவை தூய்மைப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், இதுவரை எந்த விண்கலனும் செல்லாத, சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனா என்னும் பகுதிக்கு, தனது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஆகஸ்ட் 12, இஞ்ஞாயிறு இந்திய நேரம் பகல் ஒரு மணிக்கு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள Cape Canaveral ஏவுத்தளத்திலிருந்து 'பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe)' என்னும் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், கொரோனா சுற்று வட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது குறித்து ஆராய்ந்து தகவல்களை அளிக்கவுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குச் செயல்படும்வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள பார்க்கர் விண்கலம், நொடிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அறுபது இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில், சூரியனை இது அணுகவுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1958ம் ஆண்டில், சூரியக் காற்றை முதன்முதலில் விளக்கிய, 91 வயது நிறைந்த, விண்வெளி ஆய்வாளர் யூஜின் பார்க்கர் (Eugene Parker) என்பவரது பெயரில் இந்த விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவியல் புரட்சி உலகில் வாழ்ந்துவரும் இன்றைய இளையோர், பல நேரங்களில், உலகின் பொய்த் தோற்றங்களில் சிக்கி, திசைமாறிச் செல்கின்றனர். நிலையற்ற இன்பங்களைக் கொடுப்பதில் இளமையைத் தொலைத்து, நிம்மதி இழந்த நிலையில், வாழ்வு பற்றி பல கேள்விகளை எழுப்பி, சரியான வழிகாட்டிகளையும் தேடுகின்றனர். ஆகஸ்ட் 11, இச்சனிக்கிழமை மாலையில், ஏறத்தாழ எழுபதாயிரம் இத்தாலிய இளையோர், உரோம் நகரின் சிர்கோ மாஸ்ஸிமோ திடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர். அச்சமயத்தில், அந்த இளையோரின் சார்பாக, நால்வர், வாழ்வின் பொருள், வாழ்வில் எதைத் தெரிவு செய்வது, வருங்கால வாழ்வு, அன்பு ஆகிய தலைப்புகளில், திருத்தந்தையிடம் கேள்விகளைக் கேட்டனர். இவர்கள், “ஆயிரம் சாலைகள் வழியாக” என்ற தலைப்புடன், இத்தாலியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், நூற்றுக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் நடந்தே உரோம் நகருக்கு வந்து சேர்ந்தவர்கள். இவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்கள் கனவுகள் திருடப்பட அனுமதியாதீர்கள்

“எனதருமை இளையோரே, உங்கள் கனவுகளை எவரும் திருடுவதற்கு அனுமதியாதீர்கள், ஏனென்றால், அவை மனித சமுதாயத்தின் வருங்காலத்திற்கு வித்தியாசமான பாதையைக் காட்டும் ஒளிமயமான மற்றும், மிக முக்கியமான விண்மீன்கள்”. அன்பு இளையோரே நீங்கள் உங்கள் இதயங்களில் ஒளிரும் விண்மீன்களைக் கொண்டிருக்கின்றீர்கள். அவையே உங்கள் கனவுகள். அவையே உங்கள் சொத்து மற்றும் அவை உங்களின் பொறுப்பில் உள்ளன. அவையே உங்களின் வருங்காலம் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்குத் துணிச்சல் தேவை. உங்கள் கனவுகள் வளர வேண்டும், அவை தூய்மைப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். உங்கள் கனவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை என்றாவது நீங்கள் நினைத்து வியந்தது உண்டா? தொலைக்காட்சியைப் பார்ப்பதிலிருந்தா? உங்கள் நண்பர் பேசுவதைக் கேட்டதிலிருந்தா?  பகல் கனவிலிருந்தா? அவை, பெரியவையா, சிறியவையா? ஆறுதல்தரும் கனவுகளா, அமைதியான நல்வாழ்வுக்கு இட்டுச்செல்லும் கனவுகளா? கனவுகள் காணாத இளையோர் இருக்க இயலாது. உண்மையான கனவுகள் நம்மைப் பற்றியவை. நீங்கள் காணும் பெரிய கனவுகள் பொய்த் தோற்றங்களாக மாறிவிடாமல் இருக்கவும், எல்லா சக்தியும் தன்னிடமே உள்ளது என்ற மயக்கத்தில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உங்கள் வாழ்வில் கடவுள் தேவை.

நன்மை செய்யாமலிருப்பது தீமை

இச்சனிக்கிழமை நிகழ்வில் இவ்வாறு இளையோரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்துகொண்ட ஏறத்தாழ ஒரு இலட்சம் இளையோரை வாழ்த்தி அவர்களுக்கு மூவேளை செப உரை வழங்கினார். இளையோரே, நீங்கள் நன்மை செய்கிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தார் திருத்தந்தை. ஒரு நல்ல கிறிஸ்தவர் என்பவர், தீயது செய்யமால் இருந்தால் மட்டும் போதாது. மாறாக, அவர் நன்மை செய்ய வேண்டும் மற்றும் தீமையை எதிர்க்க வேண்டும். நல்லவற்றோடு தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். நான் யாரையும் புண்படுத்தவில்லை என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றோம். பலர் தீமை செய்வதில்லை, அதேநேரம் எந்த நன்மையும் செய்வதில்லை. இத்தகையோர் தங்கள் வாழ்வை, அக்கறையற்ற தன்மையில் செலவழிப்பவர்கள். தீமையிலிருந்து மட்டும் விலக்கி நடக்கும் எண்ணம், நற்செய்திக்கும், இளையோரின் இயல்புக்கும் முரணானது.

இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் வாழ்வுக்கு ஒரு வாய்ப்பாட்டைச் சொல்லிக் கொடுத்தார். “தீமை செய்யாமலிருப்பது நல்லது. ஆனால், நன்மை செய்யாமலிருப்பதும் தீமையாகும்”. கிறிஸ்தவர்கள், தீமையை எதிர்க்க வேண்டும். பிறரை வெறுக்காமல், அவர்களை மன்னிக்க வேண்டும், பழிவாங்கும் உணர்வைக் கைவிட்டு, பகைவர்களுக்காகச் செபிக்க வேண்டும். பிரிவினைகளுக்குக் காரணமானவைகளைத் தேடாமல், அமைதியைக் கொணர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறர் பற்றி நாம் மோசமாகப் பேசாமல் இருப்பது மட்டும் போதாது, அதோடு, யாராவது பிறரைப் பற்றி மோசமாகப் பேசினால், அவர்களை இடைமறித்து அதை தடுக்க வேண்டும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைய சமுதாயத்தின் வாழ்வில்  மிகுந்த அக்கறை கொண்டு, தந்தைக்குரிய பாசத்தில், கனவு காணுங்கள், கனவுகளைச் செயல்படுத்துவதில், கடவுளின் உதவியை நாடுங்கள், தீமையைத் தவிர்த்து நடங்கள், அதேநேரம் நன்மை செய்வதிலும் மனந்தளர வேண்டாம் என்று சொன்னார்.

தமிழக இளையோரின் சமூகநலப் பணிகள்

இன்றைய நம் தமிழக இளையோர் பலரும் இவ்வாறு வாழத் தொடங்கிவிட்டனர். முகநூல் மற்றும் கட் செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, சமூக நலன் கொண்ட இளையோரை ஒன்று திரட்டி, சமூகப் பணிகளில் அக்கறை செலுத்தி வருகின்றனர். வாரத்தில் ஆறு நாள் சொந்தப் பணி. ஒரு நாள் சமூகப் பணி என, ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்து வருகின்றனர். இப்பணி, தங்களோடு நின்றுவிடக் கூடாது எனக் கருதி, வளர்ந்து வரும் மாணவர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இரத்த தானம், உடல் தானம், இலவச கண் சிகிச்சை முகாம், ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுதல், டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்தல், குளங்களைத் தூர்வாருதல், அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளுதல், நீர்நிலைகளில் சுகாதாரம் பேணுதல், மரக்கன்று வைத்து பராமரித்தல், குளத்துக் கரைகளில் பனங்கொட்டைகள் முளைக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இளையோர் முன்னெடுத்துச் செய்கின்றனர். இப்பணிகள் திறம்பட நடைபெறவும், தொடரவும் வெளியூர்களில் பணிபுரியும் அந்தந்த ஊர் இளையோர் பொருளாதார உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்துகின்றனர்.

எடுத்துக்காட்டுக்கு, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் பல்வேறு தொழில்கள் புரியும் ஏறக்குறைய இருபது இளையோர் இணைந்து, ‘பசுமை இயக்கம்' எனும் பெயரில், கட்செவி அஞ்சலில் தனியாக குழு அமைத்து, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். கோவில் விழா நாள்களில் பக்தர்கள், பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வும், தவிர்க்கமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை, பயன்படுத்தியபின் சுற்றுப்புறத்தில் வீசாமல் இருக்க, குப்பைத் தொட்டிகள் உருவாக்கியும் பணி செய்துள்ளனர். இதேபோன்று, இளந்தளிர்' என்னும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளையோர், குறிப்பன் குளம் என்னும் கிராமத்தில், சாலையோரம், குளத்துக் கரையோரம் என ஊரைச் சுற்றிலும், ஏறக்குறைய 610 மரக்கன்றுகளை நட்டுவைத்து, கடந்த 35 வாரங்களாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். இதில் இளையோருடன், 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் செலவினங்களுக்கு வாரந்தோறும் யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். (தினமணி)

இளையோரிடம் அப்துல் கலாம் அவர்கள்

வருங்கால இந்தியாவை வளமான இந்தியாவாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், இளையோரைச் சந்தித்த போதெல்லாம் கனவு காணுங்கள், உங்களால் முடியும் என நம்புங்கள் என்றார். கரிகாலன் முடியாது என நினைத்திருந்தால் தமிழகத்தில் கல்லணை கட்டப்பட்டிருக்காது. பிரித்தானிய ஆதிக்கத்தை எதிரக்க முடியாது என, காந்தியடிகளும்,  சுதந்திரப்போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்ரமணியன் அவர்களும், எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும் முடியாது என நினைத்திருந்தால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்காது. விக்ரம் சாராபாய் அவர்கள், முடியாது என நினைத்திருந்தால், இன்று செயற்கைகோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. வர்கீஸ் குரியன் அவர்கள், முடியாது என நினைத்திருந்தால், இந்தியா வெண்மைப் புரட்சியில் வெற்றி அடைந்திருக்காது. எனவே முடியும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வோர் இந்தியருக்கும் இருக்க வேண்டும் என்றார், கனவு நாயகன் அப்துல் கலாம். இந்தியாவை மேம்படுத்த என்ன செய்யலாம் என சிந்தனை செய்யுங்கள் என்றார் கலாம். இந்திய நாடு, வருகிற புதனன்று, 72வது சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கவுள்ள இவ்வேளையில், பெரியோரின் எண்ணங்களை, இளையோர்,சிந்தனை செய்வது நல்லது.

இளையோரே, உங்களின் மனது எதை விரும்புகிறதோ அது நிச்சயம் உங்களை வந்து சேரும். எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றிபெறுவதுதான் இளையோரின் தனித்தன்மை என்றார் கலாம். சமூகத்திற்கு நல்லது செய்யும் இளையோரே, உங்கள் நற்பணிகளைத் தொடருங்கள். முடியும் என்ற தன்னம்பிக்கையை ஆயுதமாகக் கொள்ளுங்கள். உங்கள் இதயங்களில் ஒளிரும் விண்மீன்களே, உங்கள் கனவுகள்.

இளையோரின் கனவுகள் மெய்ப்பட

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2018, 14:25