Cerca

Vatican News
கேரளாவில் வெள்ளப் பெருக்கு கேரளாவில் வெள்ளப் பெருக்கு  (ANSA)

வாரம் ஓர் அலசல் – இயற்கையின் எச்சரிக்கை மணி

காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதைக் கணக்கில் கொண்டு, இனி நம்முடைய அனைத்து வருங்கால திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்

மேரி தெரேசா-வத்திக்கான்

கேரள மாநிலம், அழகிய அரபிக் கடல், அடர்ந்த வனங்களைக் கொண்ட மேற்குதொடர்ச்சி மலை, ஆறுகள், உப்புநீர்த் தேக்கங்கள், இரப்பர் தோட்டங்கள் போன்ற, இயற்கையின் ஏறத்தாழ அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள ஒரு பூமி.  இதனால், கேரளா, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படுகிறது. 590 கிலோ மீட்டர் நீள கடற்கரையைக் கொண்டுள்ள கேரளாவின் 44 நதிகளில், 41 உற்பத்தியாவதும் மேற்குதொடர்ச்சி மலையில்தான். Kera என்றால், மலயாள மொழியில் தேங்காய் என்று பொருள். கேரளாவில் தென்னை மரங்களும் ஏராளம். இந்தியாவிலேயே ஒரு மாறுபட்ட இயற்கைச் சூழலைக் கொண்டிருக்கும் கேரளாவை, தற்போது, வரலாறு காணாத மழை புரட்டிப் போட்டுள்ளது. ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் மீட்கப்பட்டு, 5,645 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு, தமிழகம் உட்பட பல பகுதிகள், நிவாரண உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், கேரளாவில் இடம்பெற்றுள்ள இந்த இயற்கைப் பேரிடர் பற்றி கவலையுடன் குறிப்பிட்டு, இப்பேரிடரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு இணைந்து செபித்தார். இடர்துடைப்புப் பணிகளை முன்னின்று ஆற்றும் கேரளத் திருஅவைக்கு நம் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்போம் எனவும் கூறியத் திருத்தந்தை, உலக அளவில் உதவிகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

இதய நோய் சிறுமி அட்சயா கேரளாவுக்கு உதவி

கனமழையால் பரிதவிக்கும் மலயாள மக்களுக்கு, சிறுவர், சிறுமியர் முதல் பெரியோர் வரை, மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகின்றனர். கரூர் மாவட்டம், குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த, அட்சயா என்ற சிறுமி, தனது இதய அறுவை சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்கள் வழியாகத்  திரட்டிய பணத்தில் ஒரு தொகையை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி, எல்லாரையும் நெகிழச் செய்திருக்கிறார். ஏழாவது படிக்கும் சிறுமி அட்சயா, இதயத்தில் பிரச்சனையோடு பிறந்தவர்.  அட்சயாவின் நிலைமை, கடந்த ஆண்டு மோசமாகவே, அறுவை சிகிச்சை பண்ண வழியில்லாமல் அவரது பெற்றோர் திகைத்தனர். எனவே, கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி அவர்கள், இதற்கு உதவியிருக்கிறார். சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை இலட்சம் வரை செலவு செய்து சென்னையில் அறுவை சிகிச்சை செய்ய வைத்திருக்கிறார் சாதிக் அலி. 'மறுபடியும் ஒரு வருடத்திற்குள் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அந்த அறுவை சிகிச்சைக்கு தேவை இரண்டரை இலட்சம். சாதிக் அலி அவர்கள், இதற்காக, சமூக வலைதளங்கள் மூலம் இதுவரை இருபதாயிரம் ரூபாய் வரை திரட்டியிருக்கிறார். இந்நிலையில், தனக்கு சிகிச்சைக்காகக் கிடைத்த நன்கொடைப் பணத்தில் ஐந்தாயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கியிருக்கிறார், சிறுமி அட்சயா. மக்கள் பாதை என்ற அமைப்பு வழியாக இந்தத் தொகை கேரளாவிற்கு அனுப்பப்பட இருக்கிறது.

வெள்ளப்பெருக்கு பற்றி நிபுணர் குழு

கேரளாவில் மழை குறைந்ததால், அம்மாநிலம் வெள்ளப் பாதிப்பில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம், கர்நாடகாவிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டோடி கடலில் வீணாகக் கலக்கும் காவிரி, வைகை நதிகளின் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கு தமிழகத்தில் போதுமான தடுப்பணைகள் அமைக்கப்படவில்லையே என்பதும் கவலை அளிக்கின்றது. இதற்கிடையே, கேரளாவில் இயற்கைப் பேரிடரில் இவ்வளவு பெரிய சேதம் ஏற்படுவதற்கு, மனிதத் தவறுகளே காரணம் என, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் நிபுணர் குழுவின் தலைவரும், அறிவியலாளருமான மாதவ் காட்கில் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருவிதத்தில் ஏனைய மாநிலத்தவர்க்கும் இது ஓர் எச்சரிக்கை என்றே சொல்லலாம். கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் வருகின்றன. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப் பகுதியில் மனிதர்களின் பேராசை, பணம் ஈட்டும் வர்த்தக நோக்கத்தில் இயற்கையை சூறையாடியதன் விளைவுதான் இன்று கேரளாவில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற மிகப்பெரிய இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது..

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் செயல்பட்டுவரும் சுற்றுசூழல் அறிவியல் மையத்தின் நிறுவனர் மாதவ் காட்கில் தலைமையில், 2010ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்தது. ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கி.மீ கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவையும் எப்படி பாதுகாக்க வேண்டும், எந்தெந்த இடம், எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது, எந்தப் பணிகளைச் செய்யலாம், எந்த பகுதியில் மட்டும் மக்கள் வாழலாம் என்பதை, அந்தக் குழு, தனது அறிக்கையில் பட்டியலிட்டது. ஏறக்குறைய 64 விழுக்காட்டு, அதாவது அறுபதாயிரம் கி.மீ. பகுதிகளை மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அந்தக் குழு அறிவித்தது. இது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளையும், கடைப்பிடிக்க வேண்டிய கடினமான விதிமுறைகளையும் வகுத்திருந்தது.

கேரளாவின் தற்போதைய நிலைக்கு, பொறுப்பற்ற சுற்றுசூழல் கொள்கைகளே காரணம். அளவுக்கு அதிகமான கல்குவாரிகள் செயல்பட்டதும், சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியதும்தான் பிரச்சனைக்கு காரணம். கேரளாவில் தற்போது பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எங்கள் நிபுணர் குழு ஏற்கனவே அடையாளம் கண்டு கூறி இருந்தது. ஆனால், அந்த அறிக்கையை கேரள அரசு ஏற்க மறுத்து விட்டது. சட்டவிரோத குவாரிகள் செயல்பாடுகளையும், கட்டுமானங்களையும் நாங்கள் நிறுத்தக் கோரினோம். ஆனால், கேரளாவில் அடுத்தடுத்து வந்த மாநில அரசுகள் அதை பொருட்படுத்தவில்லை. கேரளாவில் கல் குவாரிகள் பயன்பாட்டிற்காக 150 ஜே.சி.பி. இயந்திரங்களுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கேரளாவில், 1,650 இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. கேரள அரசு இப்போதாவது விழித்து கொண்டு சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பாட்டை நிறுத்த வேண்டும். இவ்வாறு காட்கில் அவர்கள் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் மாநகரங்கள்

2015ம் ஆண்டில் சென்னை, 2014ம் ஆண்டில் ஸ்ரீநகர் போன்ற நகரங்களும், 2017ம் ஆண்டில் பெங்களூரு நகரமும், திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் புவனேஸ்வர் நகரமும்,  கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரமும் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது. இனி வரக்கூடிய காலங்களில் தீவிர காலநிலை நிகழ்வுகள், இன்னும் அதிகமாகும் என்றும், ஏறக்குறைய மூன்று மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும், உலக காலநிலை அறிவியலாளர்களும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்து வருகின்றனர். புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும்போது, இதைப் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

1076 கி.மீ. நீள கடற்கரை கொண்ட தமிழகம், காலநிலை மாற்றத்தால், அதிகத் தீவிரமான காலநிலை மாற்ற நிகழ்வுகளைச் சந்திக்கும் மற்றும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. எனவே, காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்க முடியும் மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதைக் கணக்கில் கொண்டு, இனி நம்முடைய அனைத்து வருங்கால திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும். இதற்கிடையில்,  'தமிழகத்தில், அடுத்த மூன்றாண்டுகளில், 1,000 கோடி ரூபாயில், தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 62 தடுப்பணைகள் கட்ட, 292 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பதாக, இத்திங்கள்தின செய்திகள் கூறுகின்றன.

உண்மையில் கேரளா, நமக்கு பாடம் புகட்டவில்லை, மாறாக, பருவநிலை மாற்றம் குறித்த நமது அக்கறையின்மைக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. விழித்தெழுவோம்.

இயற்கையின் எச்சரிக்கை மணி
20 August 2018, 16:00