தேடுதல்

Vatican News
நடராஜன், மகளிர் நூலகத்திற்கு வீட்டைத் தானம் செய்தவர் நடராஜன், மகளிர் நூலகத்திற்கு வீட்டைத் தானம் செய்தவர்  

வாரம் ஓர் அலசல் – சிறைப் பறவையின் புதிய வாழ்வு

நீங்கள் இதற்குமுன் எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. இதற்குப்பின் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். முடிவு எடுத்தபின் அதற்காக தொடர்ந்து உழையுங்கள்

மேரி தெரேசா – வத்திக்கான்

நீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இதற்குப்பின் என்னவாக ஆக விரும்புகின்றீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். முடிவு எடுத்தபின் அதற்காக தொடர்ந்து உழையுங்கள். அப்போது உங்கள் கனவுகளும் நிறைவேறும்... இதைத்தான் அப்துல் கலாம் அவர்கள், கனவுகாணுங்கள் என்றார். பூலான்தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு பலருக்குத் தெரிந்த ஒன்று. தன் வாழ்க்கையைச் சீரழித்தவர்களைப் பழிவாங்க, கொள்ளைக்காரியாக மாறியவர் பூலான்தேவி. இவர், உத்தரபிரதேச மாநிலத்தில், மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தவர்கள். வயதுக்கு வரும் முன்பே, அதாவது 11 வயதில், இவரைவிட 20 வயது மூத்தவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார் பூலான்தேவி. அதன்பின் இவர் கணவர் உட்பட பலரிடமிருந்து அனுபவித்த பாலியல் கொடுமைகள் ஏராளம், ஏராளம். தன்னைச் சீரழித்தவர்களைப் பழிவாங்கும் கொள்ளையரசியாக மாறிய இவர், கடைசியில் மனந்திருந்தி, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

பல கடும் கொலைக் குற்றவாளிகள், திருந்தி வாழ்ந்த கதைகள் உண்டு. திருந்தி வரும்போது சமுதாயத்தின் அங்கீகாரம் கிடைக்காமல், பழைய நிலைக்கே திரும்புவர்களும் உண்டு. சமுதாயம் என்னை ஏற்கும்போது ஏற்றுக்கொள்ளட்டும், நான் எனது மனமாற்ற மனநிலையில் உறுதியாய் இருப்பேன் என்று, நல்வழிப் பயணத்தில் தொடர்கின்றவர்களும் உண்டு. இவர்களை நினைக்கும்போது, “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும், வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”. என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்வரிகளே நினைவுக்கு வருகின்றன.

சிறையில் கற்ற பாடம்

மதுரை அண்ணா நகரில், ஸ்ரீ யோகி ஜென் வாடகை நூலகம் மற்றும் விற்பனை நிலையத்தை வைத்து நடத்துகின்றவர், பி.ஆர். ரமேஷ். 14 வயதில் சிறைக்குச் சென்ற இவர், ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீது, இருபது கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில், இவரது பெயரும் இருந்தது. ஆனால் இப்போது எழுத்தாளர் பி.ஆர். ரமேஷ் என்ற பெயருடன் விளங்கி, தொடர்ந்து நூல்களும் எழுதி வருகிறார் என்று தி இந்து தமிழ் இதழில் ஒரு செய்தி இருந்தது. திருந்திய வாழ்வில் தனது இலட்சியங்கள் பற்றியும் அதே இதழில் மதுரை ரமேஷ் அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார். எனது வன்முறைக்கான தளமாக சிறைச்சாலை அமைந்தது. சிறையில் ஏற்பட்ட சகவாசம் எனக்கு கேடு விளைவித்தது. ஆனால் அதே சிறையில்தான் மனத்தெளிவும் பெற்றேன். காவல்துறையின் நிரந்தர ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றதால் ஓடி ஓடி ஒளிந்தேன். ஒரு கட்டத்தில் வன்முறை எதற்குமே தீர்வாகாது என்பதை உணர்ந்தேன். ஓடி ஓடி களைத்துப்போன எனக்கு, சாதாரண மனிதனாக வாழ வேண்டும் என்ற ஆசை உதித்தது. அதன் விளைவு, வெட்டுக்குத்து, வம்புச் சண்டை, போட்டாபோட்டி போன்ற எல்லாவற்றையும் விட்டு நிரந்தரமாக ஒதுங்குவதாக என் கூட்டாளிகளிடம் அறிவித்தேன். ஆனால் நான் பிடித்த புலிவால் அவ்வளவு எளிதாக என்னை விட்டுவிடாது என்பதை சில காலத்திலேயே புரிந்துகொண்டேன். என்கவுன்டர், துப்பாக்கி ஆகியவை, கனவிலும் என்னைத் துரத்தின. நான் திருந்தி வாழ என்னிடம் உள்ள ஆசையையும், என் உள்ளக்குமுறலையும் ஊடகங்கள் மட்டும் சமூகத்துக்கு கொண்டு சேர்க்காவிட்டால், நான் எப்போதோ துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகியிருப்பேன். இதுவரை வன்முறை பக்கம் நான் திரும்பியதே இல்லை. என்ன நேர்ந்தாலும் சரி, இனிமேலும் திரும்பப் போவதில்லை. தொலைந்த தூரங்கள், பாலைவனத்தின் நெற்கதிர்கள், ஒரு கல்லறை பேசுகிறது, போர்முனையில் ஒரு கனவு, கடவுளுக்கே சபதம் ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறேன். ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். குடும்பம், நூலகம், எழுத்து, சமூகப்பணி ஆகியவற்றில்   பி.ஆர்.ரமேஷாகியாகிய நான் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். என்னை சமூகம் பி.ஆர் ரமேஷ் என்று கூப்பிடுவதில் மகிழ்கிறேன். வன்முறைக்கு வாக்கப்பட்டவன் அதிலிருந்து விவாகரத்து பெற்றுவிட்டேன். ஏழு ஆண்டுகளுக்கு முன் காவல்துறை என்னை ரவுடிகள் பட்டியலிலிருந்து நீக்கியது. நான் இப்போது செய்யும் எழுத்துப் பணியையும் நூலகப் பணியையும் இலாப நோக்கத்தோடு செய்யவில்லை. எனக்குப் பிடித்தமானதைச் செய்கிறேன். எனது குடும்பத் தேவைகளை ஓரளவு நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்குப் பணம் கிடைக்கின்றது. அதுபோதும். என்னால் இப்பணியைச் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது, சமூகச் சிந்தனையுள்ள ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வேறு ஒரு தொழில் செய்யப் போவேன். இந்த நூலகத்தை ஆரம்பிக்கும்போது, பெண்கள் தொலைக்காட்சி சீரியலிலிருந்து விடுபட்டு புத்தக வாசிப்பை அவர்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கம்

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே என் இலட்சியமாக இருந்தது. ஆனால் இப்போது ஒட்டுமொத்த சமூகத்தையும் இணையம் என்ற போதையிலிருந்து மீட்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருக்கிறது. இதற்காகவே என் நூலகத்தில் விதவிதமான புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். நாற்பது விழுக்காட்டு நூல்கள் கதைகள் சார்ந்தவையாகவும், அறுபது விழுக்காட்டு நூல்கள் முற்போக்குச் சிந்தனையுடையவைகளாகவும் இருக்கும். நோயாலோ அல்லது, வேறு எந்த காரணங்களாலோ நூலகம் வரமுடியாதவர்களுக்கு நானே நேரில் சென்று புத்தகங்களைக் கொடுத்து வருகிறேன். முகநூல், வாட்சப் என மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையில் வாசிப்பை அவ்வளவு எளிதாகப் பழக்கப்படுத்திவிட முடியமா எனக் கேட்டால், உடனே முடியாவிட்டாலும் மாற்றம் வரும் என நம்புகிறேன். ஒரு காலத்தில், கூழ் சாப்பிடுவது வறுமையின் அடையாளமாக இருந்தது. ஆனால் அதையே இன்று காரில் வந்து தெருவோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது என்று மாறிவிட்ட சமூகத்தில், புத்தக வாசிப்பையும் ஊக்கப்படுத்த முடியும். நூலகம் என் வாழ்நாள் இலக்கு. அதையும் தாண்டி, சிறுவர் பூங்காக்கள் அமைப்பது போன்றவற்றை ஊக்குவிக்கவும் ஆசைப்படுகிறேன்.

ரமேஷ் அவர்கள், மக்களிடம், குறிப்பாக, பெண்கள் மத்தியில் புத்தக வாசிப்பையும் ஊக்குவித்து வருவதைப் போல, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த நடராஜன் தாத்தா அவர்கள், ``பொம்பளப் புள்ளைங்க படிக்கணும்மா!'' எனச் சொல்லி, பெண்களுக்கான நூலகத்துக்காக தனது வீட்டை எழுதிக் கொடுத்துள்ளார்.

மகளிர் நூலகத்துக்கு வீடு தானம்

இந்த தாத்தா செய்த புண்ணியத்தில் இப்போது அந்த ஊரில் பெண்களுக்கான நூலகம் உருவாகியிருக்கிறது. இது பற்றிச் சொல்லும் நடராஜன் தாத்தா, ``எனக்குப் புள்ளை குட்டி கிடையாது. ஒண்டியா வாழ்ந்துட்டிருக்கேன். அதான், என் வீட்டைப் பெண்கள் நூலகம் அமைக்க அரசுக்குக் கொடுத்துட்டேன். அதோட மதிப்பு ஒரு கோடின்னு பதிவுசெய்திருக்காங்க. எவ்வளவா இருந்தா என்ன. நாலு பேருக்கு உதவுச்சுன்னா போதும்'' என்கிறார். ``வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கத்தைப் பாத்துட்டேன். இதுதான் வாழ்க்கை, இது இருந்தால்தான் வாழலாம்னு எந்த விஷயத்தையும் முடிவுசெஞ்சுக்கறதில்லை. நாம வாழுற வாழ்க்கை மத்தவங்களுக்கும் உதவுற மாதிரி இருந்தால் போதும். நான் அரசு பள்ளியில வாத்தியார இருந்தேன். என் மனைவி படிக்கலை. கல்யாணத்துக்கு அப்புறம் நான்தான் பாடம் சொல்லிக்கொடுத்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கிறியான்னு அடிக்கடி கேட்பேன். அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா. பொம்பளையா பொறந்துட்டா படிக்கக் கூடாதுன்னு இல்லே. அதுக்கான சூழல் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் கிடைக்கல. கிடைச்சவங்களும் தயக்கத்தால் படிப்பை பலி கொடுத்துட்டாங்க. அது என் மனசுல ஒரு குறையாவே இருந்துச்சு. பெண்களுக்கான நூலகம் திறந்தது மூலமா, அந்தக் குறையிலிருந்து வெளியே வந்துட்டேன்'' என, விகடன் இதழில் பகிர்ந்து கொண்டுள்ளார், நடராஜன் தாத்தா.

புத்தக வாசிப்பு அவசியம்

'புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், கூறியுள்ளார். தெகார்ட் என்பவர், உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்றார். ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்திஜி. புத்தக வாசிப்பு நம்மை ஒரு புது உலகிற்கு அழைத்துச் செல்கிறது. ஒரு மனிதருக்கு சுவாசிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாசிப்பு என்பதை உணர்வோம்.

06 August 2018, 15:45