தேடுதல்

Vatican News
வட கொரியா, தென் கொரியா குடும்பத்தினர் சந்திப்பு வட கொரியா, தென் கொரியா குடும்பத்தினர் சந்திப்பு 

வாரம் ஓர் அலசல் – பிரிந்தவர்கள் இணைந்தால்…

பிரிவு என்பது எப்போதும் வேதனை தரவல்லது. ஆனால் அந்தப் பிரிவுதான் உண்மையான உறவு எது, போலியான உறவு எது, உண்மை அன்பு எது என்பதைப் புரிந்துகொள்ள வைக்கின்றது.

மேரி தெரேசா - வத்திக்கான்

68 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு

கடந்த வாரத்தில் (ஆக.22,2018) தென் கொரியாவிலிருந்து ஏறக்குறைய 90 குடும்பத்தினர், வட கொரியா பக்கம் சென்று, அறுபது ஆண்டுகளுக்குமேல் சந்திக்காமல் இருந்த உறவுகளைச் சந்தித்து, கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். 1950ம் ஆண்டு ஜூன் 25ம் நாளன்று, வட கொரியா, தென் கொரியாவை ஆக்ரமித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை தொடங்கியது. சீனா, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய இரு கம்யுனிச நாடுகளின் ஆதரவுடன் வட கொரியாவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வலுவான ஆதரவுடன் தென் கொரியாவும் சண்டையிட்டன. இச்சண்டை 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முடிவுற்றது. இச்சண்டையின்போது பல குடும்பங்கள் பிரிந்தன. கடந்த 2017ம் ஆண்டு இரு கொரிய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐம்பத்தேழாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைய விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களில், 89 குடும்பங்களிலிருந்து ஏறக்குறைய 330 தென் கொரியர்கள், தங்கள் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சக்கர நாற்காலிகளில் இருந்தனர். 68 ஆண்டுகளுக்குப் பிறகு, 11 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இந்த சந்திப்பில், வட கொரியாவிலிருந்து, 185 உறவினர்களை, தென் கொரியர்கள் சந்தித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில், தென் கொரியாவில் வாழ்ந்து வரும் Lee Keum- Seom என்ற 92 வயது நிறைந்த தாயும், வடகொரியாவில் வாழ்ந்து வரும், அவரின் மகனான, 71 வயது நிறைந்த Ri Sang-Chol என்பவரும் சந்தித்து உரையாடியது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கொரியப் போரின்போது, தாய் லீ அவர்கள், தனது இரு மகள்களுடன் தென் கொரியாவிற்குத் தப்பித்துச் செல்ல, அவரின் கணவரும், நான்கே வயதான அவரின் மகன் ஷாங் சோலும், வட கொரியாவிலேயே தங்கிவிட்டனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகனைக் கண்டதும் கட்டி அணைத்து, கண்ணீர் விட்ட தாய் லீ அவர்கள், உனக்கு எத்தனை பிள்ளைகள், மகன் இருக்கின்றானா என்ற கேள்விகளைக் கேட்டுள்ளார். பின்னர்,  நீ நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி விடைபெற்றுச் சென்றுள்ளார் தாய் லீ. இதேபோல் போர்கள், இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட சில சூழல்களால், பல ஆண்டுகள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம்.

இலங்கை உறவுகள் சந்திப்பு

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பிரிந்து பல்வேறு நாடுகளில் வாழும் சொந்தங்கள், எத்தனையோ ஆண்டுகளாக ஒருவரையொருவர் சந்திக்காமல் வாழ்ந்து வருகின்றனர். 42 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பிரிந்தவர்கள், தற்போதைய வாட்சப் வசதியால், திருச்சியில் இணைந்துள்ளனர். அதேபோல், இலங்கையில் குடும்பச் சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்குப்பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கண்ணம்மாள் என்ற பாட்டி, ஆறு மாதமாக தன் மகனைப் பிரிந்து, பல இன்னல்களைச் சந்தித்து, மகனைச் சந்திக்க வழியில்லாமல், சாலை ஓரமாக இருந்துள்ளார். யாரோ ஒரு நல்ல மனிதர்,  அந்தப் பாட்டியை கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துள்ளார். இந்தக் காப்பகத்திற்கு உதவிசெய்யச் செல்லும் மகேந்திரன் என்பவர், கண்ணம்மா பாட்டியைச் சந்தித்து, அவர்களின் மகன்கள் பற்றி விசாரித்துள்ளார். சிறியதொரு துப்பு கிடைக்க, விடாமுயற்சியுடன் மகன் இராகவனைத் தேடி, தாயையும், மகனையும் சந்திக்க வைத்துள்ளார் மகேந்திரன். யுடியுப்பில் பதிவாகியுள்ள அந்தச் சந்திப்பு, கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும்.

பாட்டியைச் சந்தித்த பள்ளி மாணவி

பிரிந்த அன்பு உறவுகள் இணைந்தால், கண்ணீரே, மொழியாய் இருக்கும், கண்ணீரே ஆனந்தமாக மிஞ்சும். கடந்த வாரத்தில் வாட்சப் நண்பர்கள், இத்தகைய ஒரு சோக நிகழ்வு நடக்கவே கூடாது என, ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். அதில் பள்ளி மாணவி ஒருவர், தன் பாட்டியைக் கட்டி அணைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். அந்த மாணவி படிக்கும் பள்ளியில், வயதானவர்களைச் சந்திப்பதற்காக, ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு தற்செயலாக தன் பாட்டியைப் பார்த்துள்ளார் அந்த மாணவி. வீட்டில் பாட்டி எங்கே என கேட்டபோது, பாட்டி வெளியூர் சென்றுள்ளார் எனச் சொல்லியுள்ளார்கள். இதை அந்த மாணவியும் நம்பியுள்ளார். ஆனால் பாட்டியை முதியோர் இல்லத்தில் தற்செயலாகப் பார்த்ததும், அச்சிறுமி பாட்டியைக் கட்டி அணைத்து முத்தமிட்டு அழுதுகொண்டே இருந்தார்.

சீனக் கலாச்சார புரட்சியின்போது பிரிந்தவர்கள் சந்திப்பு

சீன கம்யுனிச கட்சித் தலைவர் மாசேதுங் அவர்கள் கொண்டுவந்த, கலாச்சார புரட்சியின்போது சீனாவைவிட்டுத் தப்பிச்சென்ற இரு பள்ளி நண்பர்கள், தற்போது ஹாங்காங் நகரில் சந்தித்துள்ளனர். இவர்கள் சீனாவில் Guangzhou நகரில் ஆரம்ப பள்ளியில் ஒன்றாகப் படித்து நண்பர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது 71 வயதை எட்டியுள்ள Ha Sze-yuen என்பவர், தனது பள்ளிப்பருவ நண்பர் Chan Hak-chi  அவர்களைப் பல ஆண்டுகளாகத் தேடியுள்ளார். சீனாவில் 1949ம் ஆண்டில் கம்யுனிச அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதுவரை, ஹாவின் தந்தை, இராணுவ அதிகாரியாக இருந்தவர். அதற்குப்பின், மாசேதுங் அவர்களின் ஆலோசனையின்பேரில், 1950களின் மத்தியில் நகரங்களில் படித்துவந்த இளையோர் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட ஏறக்குறைய ஒரு கோடியே அறுபது இலட்சம் இளையோரில், ஹாவும் ஒருவர். இந்த இளையோர் கிராமங்களில் விவசாயிகளால் பயிற்றுவிக்கப்பட்டனர். தன் தாய் அளித்த ஊக்கத்தால், 1972ம் ஆண்டில் ஹாங்காங் நகருக்குத் தப்பித்துச் சென்றார். சீனர்கள், முன்னாள் பிரித்தானிய காலனியாகிய ஹாங்காங் செல்வது சட்டப்படி குற்றம். எனவே ஹா அவர்களும், ஹாங்காங்குக்குத் தப்பித்துச் சென்ற கடினமான பயணத்தில், வழியில் கைது செய்யப்பட்டார். எப்படியோ மீண்டும் ஹாங்காங் சென்று, பலவழிகளில் கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியுள்ளார். பிபிசி ஊடகத்தில், Ha Sze-yuen அவர்கள், தனது பள்ளிப்பருவ அனுபவம் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்த அவரது நண்பர் Chan Hak-chi, கடந்த வாரத்தில் (ஆக.24,2018) தன் நண்பரைச் சந்தித்துள்ளார். பணிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நண்பர்கள் இருவரும், தற்போது, தங்களின் ஓய்வுகாலத்தை ஆனந்தமாக அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்.

பல்வேறு காரணங்களால் பிரிந்தவர்கள் இணைய வேண்டும், உறவுகள் மீண்டும் மலர வேண்டும் என்பதுதான் எல்லாரின் ஆவல். என் அம்மாவை, என் அப்பாவை, என் பாட்டியை, என் பிள்ளையை, என் நண்பரை... எப்போது மீண்டும் பார்ப்பேன் என்ற ஆதங்கம், ஒவ்வொருவர் மனதிலும் இருந்துகொண்டே இருக்கும். கடந்த 2017ம் ஆண்டில்  மேற்குவங்கத்தில் விவகாரத்து பெற்ற ஒரு தம்பதியின் ஆறு வயது பெண் குழந்தை, நீதிமன்ற வளாகத்தில், தன் அப்பாவிடம், ‘‘அப்பா நீங்க ஏன் அம்மாவுடன் சேரக்கூடாது’ என எழுப்பிய கேள்வியால் நீதிமன்றமே அதிர்ந்தது என ஊடகம் ஒன்றில் வாசித்தோம். இத்தம்பதியர், கடந்த 2005ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும், ஒரு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தைகளும் இவர்களுக்கு உள்ளனராம்.

பிரிவு என்பது என்ன?

‘‘பிரிவு என்பது பிரிவதற்கல்ல, பிரிந்த உள்ளம் காட்டிய பரிவைப்பற்றி தெரிவதற்கு. பிரியாதபோது தெரியாத பாசம், பிரிந்த பிறகு அறிய வரும். ஆதலால் பிரிவு ஓர் அரிய வரம். பிரிவு பிரியத்தைக் கூட்டும். பிரிவே இல்லாத மனிதன் இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் பிரிவு மனிதனைக் கடந்து செல்கிறது. பல நினைவுகளைக் கொடுத்துச் செல்கிறது. பிரிவு ஒரு நெல்லிக்காய் சுவைப்பதைப் போல. அது பிரியும் நேரத்தில் புளிப்பைப் போன்ற ஒரு சுவை தரும். பிரிந்த உள்ளத்தை நினைக்கும் நேரத்தில், நீர் அருந்தினால் கிடைக்கும் இனிப்புச்சுவையாக அது இருக்கும். பிரியும் கனத்தில் நெஞ்சத்தைக் கனக்கவைத்து, கண்ணீரை தோற்றுவிக்கும். நினைவுகள் காற்றாய் வந்து கண்ணீர் துடைத்து, நெஞ்சத்தை குளிர்விக்கும்போது, பிரிவும் கொஞ்சம் இன்பம் கொடுக்கும். மனிதருக்குப் பிரிவு அடிக்கடி வேண்டும், அது பிரிவதற்கல்ல, மாறாக, பிரிந்த உள்ளத்தைப் பற்றி தெரிவதற்கு” என எழுத்து என்ற இணையபக்கத்தில், வே.வேளாங்கண்ணி என்பவர் எழுதியிருக்கிறார். நினைவுகள் புதைக்கப்படாமல் இருக்கும்வரை, பிரிவு என்ற ஒன்று இல்லைதான். எனவே நம் சமூகங்களில் பலர், பல்வேறு சூழல்களால் உறவுகளைப் பிரிந்து, எப்போது மீண்டும் சந்திப்பேன் என்ற உணர்விலும், பிரிந்தவர்களின் நினைவுகளிலும்  வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்களை இணைக்கும் பாலங்களாக நாம் செயல்படுவோம். இக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள நவீன ஊடகங்களும், நம் கனிவான பேச்சும், அன்பும், அக்கறையும், சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையும் இதற்கு உதவும். மனக்கசப்பு, சந்தேகம் போன்ற காரணங்களால் பிரிந்த உறவுகளில் தெளிவையும், மன்னிப்பின் மகத்துவத்தையும் எடுத்துரைத்து, ஒப்புரவை ஏற்படுத்துவோம். பிரிந்த உறவுகளை இணைப்பவர்களாகப் பணியாற்றுவோம். எக்காரணம் கொண்டும் இறைவனோடுள்ள உறவை, ஒருபோதும் துண்டிக்காமல் இருப்போம்.

வாரம் ஓர் அலசல் – பிரிந்தவர்கள் இணைந்தால்…
27 August 2018, 15:42