மெக்சிகோவில் பாரம்பரிய பந்தயத்தில் பங்கேற்கும் பழங்குடியினப் பெண்கள் மெக்சிகோவில் பாரம்பரிய பந்தயத்தில் பங்கேற்கும் பழங்குடியினப் பெண்கள் 

பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள்

2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 9 சிறப்பிக்கப்படும் பழங்குடியின மக்கள் உலகநாளுக்கு, "மண்ணின் மைந்தர்களின் குடிபெயர்தலும், இயக்கமும்" என்பது, ஐ.நா.வின் மையக்கருத்து.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மண்ணின் மைந்தர்கள் பலர், அவர்களது விருப்பத்திற்கும் சம்மதத்திற்கும்  எதிராக, அவர்கள் பிறந்து வளர்ந்து மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றனர் என்று ஐ.நா. அவை பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 9, இவ்வியாழன்று சிறப்பிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், மண்ணின் மைந்தர்கள் பலர், சுற்றுச்சூழலுக்கும், தங்கள் இனத்திற்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகளிலிருந்து தப்பிக்க வேறு இடங்களுக்கு செல்லும் கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

பழங்குடியின பெண்களும், சிறுமிகளும், மிக அதிகமான ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று, தன் செய்தியில் கவலை வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இவ்வினங்களில் வாழும் இளையோர், தங்கள் அடையாளத்தை இழக்கும் ஆபத்துக்கு உள்ளாகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

பழங்குடியினர், தங்கள் இடம், தொழில், இயற்கை வளங்கள் அனைத்தையும் குறித்து முடிவுகள் எடுக்கும் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று, ஐ.நா. அவை எடுத்துள்ள தீர்மானத்தை, கூட்டேரஸ் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 9ம் தேதி, பழங்குடியின மக்கள் உலக நாளைக் கொண்டாடுவதற்கு, ஐ.நா. அவை, 1994ம் ஆண்டு தீர்மானம் எடுத்தது. 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 9, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் இவ்வுலகநாளுக்கு, "மண்ணின் மைந்தர்களின் குடிபெயர்தலும், இயக்கமும்" என்ற மையக்கருத்தை, ஐ.நா. அவை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2018, 15:15