தேடுதல்

ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் 

உலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. செய்தி

ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு, உலகத் தலைவர்கள், தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றுமாறு, ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வையும், மனிதாபிமானப் பணியாளர்களுக்கு தன் மரியாதையையும் தெரிவித்துள்ளார், ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ்.

ஆகஸ்ட் 19, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனிதாபிமான நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரெஸ் அவர்கள், ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு, உலகத் தலைவர்கள், தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் ஐ.நா. நிறுவனம் தாக்கப்பட்டதில் 22 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டதன் 15வது ஆண்டு நிறைவு, இவ்வாண்டில் நினைவுகூரப்படுகின்றது என்றும், அந்த வன்முறையே, உலக மனிதாபிமான நாள் உருவாக்கப்பட காரணம் என்றும் கூறியுள்ளார், கூட்டேரெஸ்.

ஒவ்வோர் ஆண்டும் 300 பேர் வீதம் மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்படுகின்றனர், கைதுசெய்யப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் என்றும், பாக்தாத் தாக்குதலுக்குப்பின் இதுவரை, நான்காயிரத்துக்கு அதிகமான மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அச்செய்தி கூறுகிறது.

ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ சனநாயக குடியரசு, ஈராக், சொமாலியா, ஏமன் ஆகிய நாடுகளில் 26 ஆயிரத்திற்கு அதிகமான அப்பாவி பொது மக்கள்  கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், உலகில் 6 கோடியே 50 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2018, 16:12