கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களின் உடல் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களின் உடல் 

கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இந்திய ஆயர்கள் இரங்கல்

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் வழங்கிய ஆதரவையும், உதவிகளையும், நன்றியோடு எண்ணிப் பார்க்கும் இந்திய ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள், தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் ஆற்றிய பெரும் தொண்டுகளை, இந்திய ஆயர் பேரவை நினைவுகூர்கிறது என்று, ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் தியோதோர் மாஸ்கரீனஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 7, இச்செவ்வாய் மாலை, தன் 95வது வயதில் காலமான கருணாநிதி அவர்களின் மறைவால், இந்திய ஆயர் பேரவை ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது என்று, இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1969ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, பல்வேறு காலக்கட்டங்களில், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி அவர்கள் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை, திராவிட மக்களின் ஓர் அடையாளமாக விளங்கிய இவர், சாதாரண குடிமகனை உயர்த்துவதற்கு அரும்பாடுபட்டார் என்று குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் வழங்கிய ஆதரவையும், உதவிகளையும் இந்திய ஆயர்கள் நன்றியோடு எண்ணிப் பார்க்கின்றனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி அவர்களுக்கு இறைவன் நிறைவான அமைதி வழங்கவேண்டும் என்றும், அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் இறைவன் ஆறுதல் தரவேண்டும் என்றும், இந்திய ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 15:53