தேடுதல்

Vatican News
காலியான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காலியான சமையல் எரிவாயு சிலிண்டர்கள்  (AFP or licensors)

இமயமாகும் இளமை : உணவுக்கழிவுகளிலிருந்து எரிவாயு

சேலம் ‘குப்பைக்காரன் குழு’ இளைஞர்கள், உணவுக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு கலனைக் கண்டுபிடித்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

சேலத்தைச் சேர்ந்த, தன்னார்வ தொண்டு அமைப்பான, ‘குப்பைக்காரன் குழு’ இளைஞர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலொன்றுதான், வீட்டில் கிடைக்கும் உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளில் இருந்து, சமையல் எரிவாயு உற்பத்தி செய்யும் இயந்திரம். ஒரு கிலோ இயற்கைக் கழிவுகளைப் பயன்படுத்தி, முப்பது நிமிடங்கள் முதல், ஐம்பது நிமிடங்கள் வரை, சமையல் செய்ய முடியும் என, அவர்கள் செயல்முறையில் நிரூபித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு செலவு மிச்சமாவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியுமென, அந்த இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தொண்டு அமைப்பாளர்களில் ஒருவரான கெளதம் அவர்கள் கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்த கலனில், வீட்டில் உற்பத்தியாகும் உணவுக் கழிவுகளைப் போட்டால், அதிலிருந்து வாயு உருவாகும். இதை, தற்போது சமையலுக்குப் பயன்படுத்தி வரும் எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். அதனால் நமக்கு காசு மிச்சமாவதுடன் கழிவுகளையும் பயனுள்ள வகையில் பயன்படுத்திய திருப்தியும் கிடைத்த மாதிரி இருக்கும் என்று சொல்லியுள்ளார். மேலும், மாநகர் நல அலுவலகரான பார்த்திபன் என்பவர், இளைஞர்களின் இந்தப் புது முயற்சி பற்றிப் பேசுகையில், ‘இந்த கலனால் இரண்டு பலன்கள் உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு. குப்பைகளை, குப்பை மேட்டில் வீசுவதால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்கள் அப்படியே காற்றில் கலந்து துர்நாற்றம் அடிப்பதோடு சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தக்கூடும். அதை இந்தக் கலனைப் பயன்படுத்துவதின் மூலம் தவிர்க்கலாம் என்பது ஒரு நன்மை. மற்றொரு நன்மை என்னவென்றால், வீட்டுக் கழிவுகளை வீணாக்காமல் அவற்றிலிருந்து வாயு தயாரித்து அதை சமையலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்பது. இது வீட்டின் சிக்கன நடவடிக்கைக்கும் உதவியாக அமையும் என்று சொல்கிறார். (தினமணி)

30 August 2018, 13:35