தேடுதல்

நிலமும் மனமும் குளிர, மரம் வளர்ப்போம் நிலமும் மனமும் குளிர, மரம் வளர்ப்போம் 

இமயமாகும் இளமை : மரங்களே எம் பிள்ளைகள்

பிள்ளைகள் நன்றி கெட்டவர்களானால், அவர்களை மரங்கள் என்று சொல்லாதீர்கள், மரங்கள் வருத்தப்படலாம். மரங்களை, பிள்ளைகளாகப் பேணுங்கள், அவை சமூகத்தை வாழ வைக்கும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

குழந்தைப்பேறு இல்லாத சாலுமரதா திம்மக்கா அம்மையாரும், அவரது கணவரும் தங்களது பிள்ளைகளாக, மரங்களை வளர்க்கத் தொடங்கினர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாதாரண விவசாயிகளான இவர்கள், தங்களது ஊரான ஹுலிகல்லிலிருந்து குடூர் வரை செல்லும் வீதியின் இருமருங்கிலும், ஏறத்தாழ 300 நிழல் மரங்களை நட்டு, அவற்றை, தங்கள் குழந்தைகள் போன்று பராமரித்து வந்துள்ளனர். மழை அடிக்கடி பொய்த்துப்போகும் நிலையில், மரங்களுக்குத் தேவையான நீரை வாரத்துக்கு மூன்று முறை பிற இடங்களிலிருந்து கொண்டுவந்து சேர்ப்பதையும், நட்டுவைத்த மரங்கள் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்வரை அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்ப்பதுவரை இவர்களது சேவை தொடர்ந்துகொண்டே இருந்தது. பிபிசி நிறுவனம் உலகின் சக்திவாய்ந்த நூறு பெண்கள் பட்டியலில், இவரையும் ஒருவராக அறிவித்துள்ளது. இன்று தனது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளையின் வழியாக, இம்மரநடுகை திட்டத்தை பெரிய அளவில் பல்வேறு இளையோரின் பங்களிப்போடு செய்துவருகிறார் திம்மக்கா. சாதிப்பதற்கு வயதும், பாலினமும் ஒரு தடையே அல்ல என்பதற்கான எளிய எடுத்துக்காட்டாய்த் திகழும் இப்பெண்மணி, மனிதகுலம் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய வரலாறாக நிற்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2018, 14:15