தேடுதல்

காங்கோ குடியரசில் புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் காங்கோ குடியரசில் புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் 

இமயமாகும் இளமை – மன்னிப்பின் 'புரட்சியாளர்'

மன்னிப்பு இருந்தால், மனக்கண்கள் ஒளிபெறும் என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படம் விருது பெற்றது. குழந்தைப் பருவத்திலேயே இராணுவ வீரர்களாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படும் சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் நடித்த 17 வயது இளம்பெண், Rachel Mwanza அவர்கள், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார்.

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில் ஓர் எளியக் குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, கின்ஷாசா நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேரப்போவதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். கின்ஷாசாவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான பாட்டியோடு வாழ்ந்தபோது, அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.

அக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் ஒரு போலிச்சாமியார் கூறினார். பாட்டி, இரேச்சலை, அவர் பிறந்ததுமுதல் வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதையடுத்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுகள், இரேச்சல், வெளி உலகில் பல கொடிய துன்பங்களை சந்தித்த வேளையில்,. Rebelle திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இரேச்சல் அவர்கள், பன்னாட்டு கருத்தரங்குகளில் உரையாற்றினார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே தன் வாழ்வின் துயரங்களை, உலக அரங்குகளில் பேசிவருவதாக இரேச்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

La Croix என்ற பிரெஞ்ச் இதழில், இளம்பெண் இரேச்சலைக் குறித்து வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகள் இதோ: "இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

பாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரத்தால் இரேச்சல் தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. அதைவிட மேலாக, அந்நிகழ்வோ, அதைத் தொடர்ந்த துன்பங்களோ, இளம்பெண் இரேச்சலின் மனக் கண்களைக் குருடாக்கி, அவரை வெறுப்பில் ஆழ்த்தும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. அவ்விதம் நிகழாமல் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம், இரேச்சல் வளர்த்துக்கொண்ட மன்னிப்பு மனப்பான்மை. மன்னிப்பு இருந்தால், மனக்கண்கள் ஒளிபெறும் என்பதை, இரேச்சலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 14:50