மக்களை பாதுகாக்க படிக்கட்டாக மாறிய மீனவர் ஜெய்சல் மக்களை பாதுகாக்க படிக்கட்டாக மாறிய மீனவர் ஜெய்சல் 

இமயமாகும் இளமை: மக்களை பாதுகாக்க படிக்கட்டாக மாறியவர்

மக்களை பாதுகாக்க, தன்னையே ஒரு படிக்கட்டாக மாற்றிய ஜெய்சல் அவர்கள், இவ்வுலகில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு உள்ளது என்பதைப் பறைசாற்றும் தூதர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்ட பயங்கர வெள்ளமும், அவ்வெள்ளத்தின் நடுவில் ஊற்றெடுத்த தியாகச் செயல்களும் நம் நினைவுகளில் இன்னும் பதிந்துள்ளன. இவ்வெள்ளத்தில் உதவிய மீனவர்களை சிறப்பாக எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. அவர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணிகளுக்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்போவதாக கேரள மாநில முதல்வர் அறிவித்தபோது, அதை மறுத்துவிட்ட மீனவர்கள், மனிதாபிமானத்தோடு தாங்கள் மேற்கொண்ட பணிகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று முதல்வரிடம் விண்ணப்பித்துள்ளனர். எதையும் எதிர்பார்க்காமல், மனித நேயத்தை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் செயலாற்றிய உன்னத மீனவர்கள், நம் அனைவருக்கும் பாடங்கள் புகட்டுகின்றனர்.

அந்த மீனவர்களில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 32 வயதான ஜெய்சல் (Jaisal K.P.) என்ற மீனவரின் செயல் நம் நினைவுகளில் ஆழப்பதிந்துள்ளது. உயிர் காக்கும் படகு அருகிலிருந்தாலும், அதில் ஏறுவதற்கு பெண்களால் இயலவில்லை என்பதை உணர்ந்த ஜெய்சல் அவர்கள், உயிர்காக்கும் படகுக்கு அருகே, தன் முகம் வெள்ளநீரில் பதியும் வண்ணம் குனிந்து நிற்க, அவரது முதுகை ஒரு படிக்கட்டுபோல பயன்படுத்தி, பல பெண்கள் அந்த படகுக்குள் ஏறிச் சென்றனர். அக்காட்சி, மீனவர்களின் அன்பு, தியாகம், வீரம் ஆகியவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. மக்களை பாதுகாக்க, தன்னையே ஒரு படிக்கட்டாக மாற்றிய ஜெய்சல் அவர்கள், இவ்வுலகில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு உள்ளது என்பதைப் பறைசாற்றும் தூதர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2018, 14:36