தேடுதல்

Vatican News
வெடிகுண்டு விபத்தால் இரு கால்களையும், இடது கையையும் இழந்த புகைப்படக் கலைஞர், ஜைல்ஸ் டூலி வெடிகுண்டு விபத்தால் இரு கால்களையும், இடது கையையும் இழந்த புகைப்படக் கலைஞர், ஜைல்ஸ் டூலி 

இமயமாகும் இளமை : காமிராக் கண்களை இழந்தபோது...

“போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட என் உடல் ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை என் கதையில் சொல்கிறேன்.” - புகைப்படக் கலைஞர், ஜைல்ஸ் டூலி

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தன் 20வது வயதில், விளம்பர உலகில், புகைப்படக் கலைஞராக, தொழிலைத் துவங்கியவர், ஜைல்ஸ் டூலி (Giles Duley). செயற்கைத்தனம் நிறைந்த ஊடக உலகை, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தன் காமிராக் கண்களால் கண்டுவந்த ஜைல்ஸ் அவர்கள், அந்த செயற்கை உலகிலிருந்து வெளியேறி, இயற்கையான, உண்மை உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளை, புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, படங்களில் பதிவுசெய்ய ஆரம்பித்தார்.

இந்த முயற்சி, அவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்த அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஜைல்ஸ். அப்போது ஒரு நாள், பாதையில் கிடந்த நாட்டு வெடியை இவர் மிதித்ததால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். இப்போது, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார் ஜைல்ஸ். இவர் Ted.com என்ற இணையத்தளத்தில் வழங்கிய உரையில் பகிர்ந்துகொண்ட ஒருசில எண்ணங்கள் இதோ:

“போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட என் உடல் ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை என் கதையில் சொல்கிறேன்.”

ஜைல்ஸ் அவர்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?

  • “உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.
  • அங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.
  • எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால் செய்யமுடியும்.

ஊடகங்கள் காட்ட மறந்த, அல்லது, காட்ட மறுக்கும் மனிதர்களை, ஜைல்ஸ் அவர்கள், தன் புகைப்படங்கள் வழியே மக்களின் நினைவுகளில் பதிக்கிறார். அதிலும் குறிப்பாக, போரினால் தங்கள் உறுப்புக்களை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்வைத் தொடரும் பலரின் புகைப்படங்கள், மற்றும் கதைகளை நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக்குகிறார்.

18 August 2018, 14:23