1947ம் ஆண்டு முதல் சுதந்திர நாள் உரையை வழங்கும் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு 1947ம் ஆண்டு முதல் சுதந்திர நாள் உரையை வழங்கும் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு 

இமயமாகும் இளமை – நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம்

நள்ளிரவு நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில், இந்தியா சுதந்திரத்திற்கும், வாழ்வுக்கும் விழித்தெழும். - இந்தியாவின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி,  நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு அவர்கள், முதல் சுதந்திர உரையை டில்லி சட்டப்பேரவையில் வழங்கினார். "Tryst with Destiny" அதாவது, "இலக்குடன் காதல் வயப்படுதல்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, 20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வுரையிலிருந்து சில துளிகள்:

நள்ளிரவு நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில், இந்தியா சுதந்திரத்திற்கும், வாழ்வுக்கும் விழித்தெழும். இன்று நாம் கொண்டாடும் சாதனை, நமக்காகக் காத்திருக்கும் இன்னும் பெரிய சாதனைகளுக்கு ஒரு வாயிலாக, வாய்ப்பாக உள்ளது. இந்தியாவுக்குப் பணியாற்றுவது, அங்கு துயருறும் கோடிக்கணக்கானவர்களுக்கு பணியாற்றுவது என்று பொருள். வறுமை, அறியாமை, நோய், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் முடிவுக்குக் கொணர்வது என்று பொருள்.

இந்தச் சாதனைப் பயணத்தில் அனைவரும் இணைய விண்ணப்பிக்கிறோம். அற்பத்தனமாக, அழித்து ஒழிக்கும் விமர்சனங்களுக்கோ, விரக்திக்கோ, அடுத்தவரை குறை சொல்வதற்கோ இது நேரமல்ல. நம் குழந்தைகள் அனைவரும் தங்குவதற்கேற்ற சுதந்திர இந்தியா என்ற மாண்புமிகு மாளிகையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இந்நாளில் நம் சிந்தனைகள், நம் சுதந்திரத்தை வடிவமைத்த தேசத்தந்தையின் பக்கம் முதலில் திரும்புகின்றன. நம்மைச் சூழ்ந்திருந்த இருளை விரட்டியடிக்க, அவர், சுதந்திர தீபத்தை உயர்த்திப் பிடித்தார். எவ்வளவுதான் கடுமையாக புயல் வீசினாலும், அது, சுதந்திர தீபத்தை அணைத்துவிட நாம் அனுமதிக்க மாட்டோம்.

அடுத்ததாக, நமது சிந்தனைகள், தங்கள் உயிரை இழக்கும் வரையில், நம் சுதந்திரத்திற்காக உழைத்த தொண்டர்கள், வீரர்கள் பக்கம் திரும்புகின்றன.

நமக்கு முன் கடினமான பணியொன்று காத்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் இலக்கை அடையும்வரை நமக்கு ஓயவில்லை.

நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய நாட்டின் பிள்ளைகளான நம் அனைவருக்கும் சம உரிமைகள், சிறப்பு உரிமைகள், கடமைகள் என அனைத்தும் சமமாக உள்ளன. குழுவாதங்களை அல்லது குறுகிய சிந்தனைகளை என்றும் ஆதரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ கூடாது. குறுகிய சிந்தனைகளை, கருத்தளவிலோ, செயல்பாட்டளவிலோ, நடைமுறைப்படுத்தும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு, சிறந்த நாடாக இருக்க முடியாது.

பழமையும், புதுமையும் நிரந்தரமாகக் கலந்திருக்கும் நம் தாய் நாடான இந்தியாவுக்கு நமது வணக்கம். அவளது பணியில் நம்மையே பிணைப்போம்.

ஜெய்ஹிந்த்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 12:40