தேடுதல்

ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ள சடக்கோ சசாக்கியின் சிலை ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ள சடக்கோ சசாக்கியின் சிலை 

இமயமாகும் இளமை : "போரை வெல்வதற்கு ஒரே வழி, போரை நிறுத்துவது"

குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் கடமை.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று  கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.

சடக்கோவின் தோழிகள் அவரிடம் ஜப்பானில் நிலவும் ஒரு புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.

சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும். அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசை இருந்திருக்கும் என்று நம்பலாம்.

இன்றளவும், சிறு குழந்தைகள், காகித நாரைகளை செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன், குழந்தைகள் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் கடமை.

2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால், அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களின் 70ம் ஆண்டு நினைவை தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார். அந்த செப உரையின் இறுதியில், "போரை வெல்வதற்கு ஒரே வழி, போரை நிறுத்துவது" என்று அழுத்தந்திருத்தமாக கூறி முடித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2018, 15:13