தேடுதல்

ஜூலை 27ம் தேதி உருவான சந்திர கிரகணம் ஜூலை 27ம் தேதி உருவான சந்திர கிரகணம் 

இமயமாகும் இளமை - நண்பனையே நரபலியிட துணிந்த இளையோர்

அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான ஜூலை 27ம் தேதி, இளையோர் சிலர், தங்கள் பேராசையால், மூட நம்பிக்கைகளுக்கு இடம்கொடுத்து, நண்பனையை நரபலி கொடுக்க முயன்றது, வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், எலவந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், 32 வயதான பிரதீப். விவசாயத் தொழிலாளியான அவருக்கு, கிராமத்தில், ஏராளமான நண்பர்கள் உண்டு. பிரதீப்பின் நண்பரான ராம்பிரசாத் என்பவரும், அவரது நண்பர்கள் சிலரும், வாழ்வில் விரைவில் வளர்ச்சி பெறுவதற்கு வழிகள் தேடி, ஒரு மந்திரவாதியை அணுகினர். கடந்த மாதம், ஜூலை 27ம் தேதி, சந்திர கிரகண நாளன்று, குறிப்பிட்ட நட்சத்திரம், வீட்டின் தலைமகன் போன்ற அம்சங்கள் கொண்ட ஓர் இளைஞரை பலி கொடுத்தால், அவர்கள் நினைத்ததைப் பெறலாம் என்று மந்திரவாதி யோசனை தெரிவித்தார். அவர் கூறிய அத்தனை அம்சங்களும் தனது நண்பன் பிரதீப்புக்கு பொருந்துவதை ராம்பிரசாத் உணர்ந்தார். இந்த விவரத்தை தனது நண்பர்களுக்கும் தெரிவித்தார். இதையடுத்து, நண்பர் என்றும் பாராமல், பிரதீப்பை பலிகொடுக்க அவர்கள் முடிவெடுத்தனர். எலவந்தல் கிராமத்தின் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள கோவிலில் நரபலி கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

“சந்திரகிரகணத்தை ஒட்டி காட்டுக்குள் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டால் வாழ்க்கையில் எல்லா ஐஸ்வர்யங்களும் வரும், வா, சாமி கும்பிடலாம்” என்று ராம்பிரசாத், நண்பன் பிரதீப்பை அழைத்தார். அவரும் சம்மதித்து உடன் சென்றார். நண்பர்கள் குழுவுடன், புதிதாக 3 பேர் வந்திருந்ததையும், அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததையும், கோவில் அருகிலேயே ஒரு ஆளை புதைக்கும் அளவுக்கு குழி தோண்டி வைக்கப்பட்டிருந்ததையும் பிரதீப் பார்த்தார்.

ராம்பிரசாத்திடம் இதுப்பற்றி பிரதீப் கேட்டபோது, அவர் எதையோ சொல்லி மழுப்பினார். பின்னர் நண்பர்கள், பிரதீப்பை குளிக்கும்படி கூறினர். தன்னை மட்டும் எதற்கு நள்ளிரவில் குளிக்கும்படி கூறுகின்றனர், என சந்தேகம் அடைந்த பிரதீப், மெல்ல அங்கு நடப்பதை கவனித்தபோது, தன்னை அவர்கள் நரபலி கொடுக்க முயல்வது தெரிந்தது. அவர்களிடமிருந்து தப்பித்து, காவல் நிலையத்தை அடைந்தார் பிரதீப். காவல் துறையினர், பிரதீப்பை அழைத்துக்கொண்டு அவரது கிராமத்திற்கு சென்று, ராம்பிரசாத் உள்ளிட்ட அவரது நண்பர்களை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்திர கிரகணம் உருவான ஜூலை 27ம் தேதி, இந்தியாவின் முன்னாள் அரசுத்தலைவர், அப்துல் கலாம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்ற மூன்றாம் ஆண்டு நினைவு நாள். இளையோர் உயர்ந்த கனவுகள் காணவேண்டும் என்றும், கனவுகளை நனவாக்க, கடினமாக உழைக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்த அந்த மாமனிதரின் நினைவுநாளன்று, இளையோர் சிலர், தங்கள் பேராசையால், மூட நம்பிக்கைகளுக்கு இடம்கொடுத்து, நண்பனையை நரபலி கொடுக்க முயன்றது, வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. (தி இந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2018, 15:27