தேடுதல்

கேரளாவில் வெள்ளத்தில் மீட்புப்பணி கேரளாவில் வெள்ளத்தில் மீட்புப்பணி 

இமயமாகும் இளமை – விசித்திர இளைஞர்கள்

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி வீட்டில் இருந்து வெளியேற மறுத்த நூறு பேரை கத்திமுனையில் மிரட்டி இரு இளைஞர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

கேரளாவைப் புரட்டிப்போட்ட வரலாறு காணாத வெள்ளத்தில், கடந்த 18 நாட்களாக நடந்து வந்த இமாலய மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மீட்புப் பணியாற்றிய முப்படை வீரர்கள் ஆகஸ்ட் 26, இஞ்ஞாயிறன்று விடை பெற்றுச் சென்றுள்ளனர். இந்த மீட்புப் பணிகளில் சில இளையோர் விநோதமாக ஈடுபட்டு, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.    பத்தினம்திட்டா மாவட்டம், ரன்னி அருகே ஆயத்தலா பகுதியைச் சேர்ந்த பாபு நம்பூதிரி, எம்.கே. கோபகுமாரன் ஆகிய இரு இளைஞர்கள், கத்தி முனையில் மிரட்டி நூறு பேரைக் காப்பாற்றியுள்ளனர். இது குறித்து இளைஞர் பாபு நம்பூதிரி அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார். சொந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் பலர், வெள்ளத்தில் வீடு மூழ்கிவிடாது என்ற நம்பிக்கையிலும், வீட்டை விட்டுவிட்டு வர மனமில்லாமலும் இருந்தனர். படகில் வந்து பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது, வரமறுத்துவிட்டனர். இந்தச் செய்தியை அறிந்து, நானும் எனது நண்பர் கோபகுமாரும் களத்தில் இறங்கினோம். எனக்குச் சொந்தமான சிறிய பைபர் (Fiber) படகு ஒன்று இருந்தது. அந்தப் படகில் நானும் எனது நண்பர் கோபகுமாரும், மேலும் சில நண்பர்களும் சேர்ந்து, வீடுகளில் முடங்கிக்கிடப்பவர்களை மீட்டோம். முதலில் அவர்கள் வரமறுத்தனர். பின்னர் அவர்களைக் கத்தி முனையிலும், ஆயுதங்கள் மூலமும் மிரட்டிப் பணிய வைத்து, அவர்களைப் படகில் ஏற்றி, காப்பாற்றி நிவாரண முகாம்களுக்குக் கொண்டு சேர்த்தோம். எங்களின் இந்த முயற்சியால் நூறு பேரைக் காப்பாற்றினோம். பலர் எங்கள் மீது கோபமாக இருந்தார்களே தவிர, யாருக்கும் நாங்கள் காயத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த வெள்ளத்தில் எனது உறவினர் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அந்த விரக்தியில்தான் என்னால் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற இந்த முயற்சியில் நான் இறங்கினேன். அதுவும் வெற்றிகரமாக முடிந்தது. இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ள பாபு நம்பூதிரியும், அவரது நண்பர் கோபகுமாரும், தற்போது நிவாரண முகாம்களில் மக்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். இளைஞர் பாபு நம்பூதிரி அவர்கள், திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகிறார். (தி இந்து)

இளம் கன்று பயமறியாது. இளம் இரத்தம், நல்லது செய்ய, எதையும் ஆற்றத் தயங்குவதில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2018, 15:41