இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வெள்ளப் பாதிப்புக்கு உதவி இந்திய கடற்படை ஹெலிகாப்டர் வெள்ளப் பாதிப்புக்கு உதவி  

இமயமாகும் இளமை : தனது உயிரைப் பணயம் வைத்த பைலட்

ஆபத்தான முயற்சி எனத் தெரிந்திருந்தும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஹெலிகாப்டரை இரண்டுமாடி வீட்டின் மேல்தளத்தில் இறக்கினேன் - பைலட் ராஜ்குமார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்திய கடற்படையைச் சேர்ந்த, பைலட் ராஜ்குமார் அவர்கள், கேரளாவில் ஒரு வீட்டு மொட்டை மாடியில், விமானப்படைக்குச் சொந்தமான 42பி ஹெலிகாப்டரை ஆபத்தான நிலையில் இறக்கி, தனது உயிரை பணயம் வைத்து 26 பேரை காப்பாற்றியுள்ளார். இது குறித்து ராஜ்குமார் அவர்கள் கூறுகையில், எங்களிடம் உதவி கேட்ட அத்தனை பேரும் வயதானவர்கள். ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்தார். அதனால் ஆபத்தான நிலையில் எட்டு நிமிடம் ஹெகலிகாப்டரை நிறுத்தி 26 பேரையும்  மீட்டோம். இன்னும் மூன்று அல்லது நான்கு விநாடிகள் நிறுத்தியிருந்தால், ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியிருக்கும். நான் ஹெலிகாப்டரின் முழு எடையையும் வீட்டின்மேல் நிறுத்தவில்லை. அது பாதி பறந்த நிலையில் இருந்தது. ஆபத்தான முயற்சி எனத் தெரிந்தும், மனிதரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்தேன் என்று சொல்லியுள்ளார். அந்நேரத்தில் ராஜ்னீஷ் என்பவர் துணை பைலட்டாகவும், சத்தியார்த் என்பவர் வழிகாட்டும் நபராகவும், அஜித் என்பவர் விஞ்ச்சை இயக்குபவராகவும் செயல்பட்டுள்ளனர். ராஜன் என்பவரும், அவர்களோடு தண்ணீரில் இறங்கி, சாலக்குடியில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். தண்ணீரில் மூழ்கியபடி முதுகைக் காட்டியவேளையில், வெள்ளத்தில் தவித்த மக்கள் அவர் முதுகில் ஏறி மீட்புப் படகுக்குள் சென்றுள்ளனர். (YouTube)

மேலும், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 21 வயது நிறைந்த ஸ்ருதி அவர்கள், திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லுாரியில், எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், ஆகஸ்ட் 22, இப்புதன் காலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, தன் தந்தையுடன் சென்று, ஆட்சியர் ராசாமணி அவர்களைச் சந்தித்து, தன் ஆயுள் காப்பீட்டு சேமிப்பில் கிடைத்த, 80 ஆயிரத்து 74 ரூபாயை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார். இது குறித்து தெரிவித்த, மாணவி ஸ்ருதி அவர்கள், அண்மையில் கல்லுாரியிலிருந்து கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது கேரளாவின் இயற்கை அழகு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட அழகான மாநிலம், மழை வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி, தனது பொலிவை இழந்துள்ளது. அந்த மாநிலத்தை மீண்டும் சீர்படுத்த நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, எனது ஆயுள் காப்பீட்டு முதிர்வு பணத்தை வழங்கினேன் என்று கூறினார். (தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2018, 14:54