தேடுதல்

Vatican News
வரிசையாக பனை மரங்கள் வரிசையாக பனை மரங்கள்  

இமயமாகும் இளமை : பனை மரங்களை மீட்டெடுக்கும் இளைஞர்கள்

தமிழர்களின் பாரம்பரியமாகப் போற்றப்படும் பனை மரங்கள், வணிக நோக்கத்துக்காக வெட்டப்பட்டு அழிந்து வருகின்றன. இதனை மீட்டெடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தன்னார்வ இளைஞர் அமைப்பினர் பனை விதைகளை விதைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

கரிகால சோழன் பசுமை மீட்பு இயக்கம் என்ற பெயரில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளையோர் பலர், பனை மரங்களை மீட்கும் சேவையில்,  கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தன்னார்வ இளைஞர் அமைப்பினர், விழுப்புரம், விக்கிரவாண்டி சுற்றுப் பகுதி ஏரிகளில் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர். இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அகிலன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். பனை மரங்களைப் பாதுகாப்பதற்காக, பனை விதைகளைச் சேகரித்து, கடந்த 2014ம் ஆண்டு முதல், விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி, திருவாமாத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பனம் பழங்களைச் சேகரித்து வந்து, அதிலிருந்து விதைகளை எடுத்து ஏரிக் கரைகளில் விதைக்கின்றோம். விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம், கண்டம்பாக்கம், கண்டமானடி, விக்கிரவாண்டி அருகே பொம்பூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில், இதுவரை ஐந்தாயிரம் விதைகளை விதைத்துள்ளோம். இந்தப் பணியில் எங்களுடன், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அமைப்பும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே, பனை விதைகள் நடவு செய்த இடங்களில் தற்போது கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளன. தமிழகத்தில் பனை மரங்களைப் பாதுகாக்கவும், அவை வெட்டப்படுவதைத் தடுக்கவும், அரசு ஆவன செய்ய வேண்டும். பனை விதை விதைப்புப் பணிகளுக்கும் அரசு துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார், அகிலன். பனையானது வேர் முதல், இலைகள் வரை பயன் தரக்கூடியது. வறட்சியிலும் நீரைச் சேமித்து வைத்து பயன் தரும் என்பதால், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளையொட்டி இவற்றைப் பார்க்க முடியும். இதனால் நீர் நிலைகளின் கரைகளும் பலம் பெறுகின்றன. இந்த மரங்கள் பல்வேறு தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருவதால், இதனை மீட்கும் வகையில், இந்த இளையோர் இறங்கியுள்ளனர். முந்தைய காலத்தில் மக்கள் பனை ஓலைகளை விசிறியாகவும், மழைக் கோட்டுகளாகவும் பயன்படுத்தினர். காய்களிலிருந்து நொங்காகவும், பழமாகவும், குளிர் பானமாகவும், மரங்கள் கூரைக்கு வேயப்படும் வாரைகளாகவும், பனம் கிழங்குகளாகவும், நாட்டுச் சர்க்கரையாகவும், பனை மரங்கள் பயன் தருவதுடன், தமிழர்களின் பாரம்பரியச் சின்னமாகவும், எப்போதும் பலன் தரும் கற்பக விருட்சமாகவும் விளங்குகின்றன. (தினமணி)

16 August 2018, 14:56