துனிசியாவில் வேளாண்மை  துனிசியாவில் வேளாண்மை  

இமயமாகும் இளமை : வித்தியாசமாக சிந்தித்த இளைஞர்கள்

திருவாதவூர் கிராம இளைஞர்கள், ‘கனவு கிராமம்’ என்ற தங்கள் திட்டத்தில், விவசாயிகள் மற்றும், கூலித் தொழிலாளர்கள், வேலை வாய்ப்புக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயராமல் அந்தந்த கிராமங்களிலேயே வாழ்வாதாரத்தைப் பெற வைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மேரி தெரேசா - வத்திக்கான்

மதுரைக்கு அருகேயுள்ள திருவாதவூர் கிராமத்தில், 120 இளைஞர்கள்  ஒன்றுகூடி ‘கனவு கிராமம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இவர்கள், அந்தக் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவது, இரத்த தானம் செய்வது உள்ளிட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். மூன்று போகம் விவசாயம் செழிப்பாக நடந்த திருவாதவூர் கிராமம், வேதியல் உரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனையால், விவசாயமும் முன்புபோல் சிறப்பாக இல்லை. அதனால், இந்த இளைஞர்கள், விவசாயிகளிடம் மண்வளத்தைப் பாதுகாக்க, இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த இளைஞர்கள் திருவாதவூர், உலகசித்தன்பட்டி, சமத்துவபுரம், டி.மாணிக்கம்பட்டி, டி.கோவில் பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள ஆறு அரசு தொடக்கப் பள்ளிகளைத் தேர்வு செய்து, அங்கு படிக்கும் மாணவர்க்கு 500 மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர். அதோடு, அந்த மரக்கன்றுகளை, சிறப்பாக பராமரித்து வளர்க்கும் மாணவர்க்கு ‘தங்க மோதிரம்’ பரிசாக வழங்குவதாகவும், பள்ளிக்கு ஒரு குழந்தையைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். வெறும் அறிவிப்புடன் நின்றுவிடாமல், இப்போதே அந்த மோதிரங்களைச் சம்பந்தப்பட்ட ஆறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர் அந்த இளைஞர்கள். மேலும், கடந்த ஆண்டு வீட்டுக்கு ஒரு சந்தன மரக்கன்று வீதம், இந்தக் கிராமத்தில் 620 மரக்கன்றுகளைக் கொடுத்துள்ளனர் இந்த இளைஞர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2018, 15:11