தேடுதல்

துபாய் நகரம் துபாய் நகரம் 

இமயமாகும் இளமை – காவல்துறை அதிகாரியின் கருணை

துபாய் காவல்துறை அதிகாரி ஒருவர், அபராதம் கட்ட பணமில்லாமல் கைக்குழந்தையுடன் தவித்த தாய்க்கு பத்தாயிரம் திர்ஹம் கொடுத்து உதவியுள்ளார். இதனால் அந்தத் தாய் சிறையில் அடைக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளார்

மேரி தெரேசா-வத்திக்கான்

துபாய் நகரிலுள்ள Al Rashidiya காவல் நிலையத்தின் உயர் அதிகாரி அப்துல் ஹாடி அவர்கள்,  ஆகஸ்ட் 18, கடந்த சனிக்கிழமை காலையில், நீதிமன்ற அலுவலகத்தில் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு மூச்சிறைக்க ஓடிவந்த நபர் ஒருவர், `என் மனைவியை தயவுசெய்து காப்பாற்றுங்கள். என் மனைவி சிறைக்குச் செல்லக் கூடாது. எங்கள் ஏழு மாதக் குழந்தை தாயின்றி தவித்துவிடும்’ என்று கதறினார். அந்த நபரை அமைதிப்படுத்திய அப்துல் ஹாடி அவர்கள், `பதற்றப்படாமல் முழு விவரத்தைச் சொல்லுங்கள்’ என்று கூறினார். அந்த நபர் விவரிக்க தொடங்கினார்... `நான் சிறுதொழில் செய்து வருகிறேன். அந்தத் தொழிலில் திடீரென இழப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் நான் முன்னர் கொடுத்த காசோலைகள் அனைத்தும் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டன. என் மனைவியின் பெயரில்தான் என் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். அதனால் அனைத்துக் காசோலைகளிலும் அவர்தான் கையெழுத்துப் போடுவார். தற்போது காசோலை திரும்பிவந்து விட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டனர். என் மனைவிக்குப் பதில் நான் சிறைக்குச் செல்லத் தயார் என்று, நீதிமன்றத்தில் கூறியும் பலனில்லை. என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கு பண உதவி செய்ய முன்வரவில்லை. நீதிமன்றத்தில் அபராதம் கட்டத் தவறியதால் என் மனைவிக்கு நூறு நாள்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எங்களின் ஏழு மாதக் குழந்தை தாயில்லாமல் எப்படியிருக்கும்? எனவே, என் மனைவிக்குப் பதில் என்னை சிறையில் அடைக்க உதவி செய்யுங்கள்” என்று அழுகையுடன் கூறியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் கையில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும், அப்துல் ஹாடி அவர்கள் மனம் கலங்கி, சற்றும் யோசிக்காமல் அந்த நபர் செலுத்த வேண்டிய பத்தாயிரம் திர்ஹம் அபராதப் பணத்தை அவரே செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. (விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2018, 15:59