இமாச்சல பிரதேசத்தின் மந்தி நகரம் இமாச்சல பிரதேசத்தின் மந்தி நகரம் 

இமயமாகும் இளமை – அவமானத்தை சவாலாக்கியவர்

என் அன்னை பேருந்தில் சந்தித்த அவமானமே, என்னை ஐபிஎஸ் அதிகாரியாக்கியிருக்கிறது - இளம்பெண் ஷாலினி

மேரி தெரேசா - வத்திக்கான்

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஐபிஎஸ் (IPS) பயிற்சி முடித்த இளம்பெண் ஷாலினி அவர்கள், இமாச்சல பிரதேசத்தில் குல்லு மாவட்ட காவல்துறை எஸ்பியாக பணியாற்றி வருகிறார். அம்மாநிலத்தில், சாதாரண கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஷாலினி அவர்களின் தந்தை பேருந்து நடத்துனர். அவரின் அம்மா, வீட்டில் தையல் இயந்திரம் வைத்து, குடும்பச் செலவுகளுக்கு, கணவருக்கு உதவியாக இருக்கிறவர். ஷாலினிக்கு எட்டு வயது நடந்தபோது, ஒருநாள் அம்மாவுடன் பேருந்தில் பயணம் செய்தார் அவர். அப்போது, அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஆண் பயணி ஒருவர், கம்பியில் கைவைப்பதுபோல், அவரின் அம்மாவின் மீது உரசியபடி வர, பல முறை ஷாலினியின் அம்மா எச்சரித்தும் கண்டுகொள்ளாத அந்த நபர், வழக்கமாக பேருந்தில் ஆண்கள் கேட்பதுபோல, நீ என்ன பெரிய டிசியா? உன் பேச்சை கேட்க. என்று கேட்டுள்ளார். இது சிறுமி ஷாலினியின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. காவல் துணை ஆணையர் (DCP) என்பது, ஒரு பெரிய பதவி, மற்றும், அந்த அதிகாரி சொன்னால் இதுபோன்ற தகராறு செய்யும் ஆண்கள்கூட அஞ்சுவார்கள் என்பதை, பின்னர் தெரிந்துகொண்டார் சிறுமி ஷாலினி. ஆகவே படித்து டிசிபி ஆகவேண்டும் என்று மனதுக்குள் அன்றே நினைத்துக் கொண்டார் அவர். அதனால், சோர்ந்துவிடாமல் அதை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார், அதுவே அவரின் வைராக்கியமாக மாறியது. ஷாலினியின் குடும்பம், நடுத்தரக் குடும்பத்தைவிட சற்று வசதி குறைந்த குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வு பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால், தான் இவ்வளவு உயரத்துக்கு வந்ததற்கு காரணம் பெற்றோர்தான் என்றும், பிளஸ்டூ தேர்வில் குறைந்த அளவே மதிப்பெண் பெற்றபோதும், என் பெற்றோர் என்னைத் தேற்றி, உன்னால் முடியும் என்று படிக்க வைத்தார்கள் என்றும் ஷாலினி அவர்கள் கூறியுள்ளார். பிளஸ்டூ தேர்வுக்குப் பின்னர், கல்லூரியில் வேளாண் துறையில் பெற்ற பட்டம், ஷாலினிக்கு ஐபிஎஸ் கனவுக்கு பெரிதும் உதவியது. இலவசமாக கிடைத்த இணைய வசதிதான், சிவில் தேர்வுக்கு பயிற்சிபெற இவருக்கு உதவியது. ஐபிஎஸ் அகடாமியில் பயிற்சி பெற்று, 65வது பேட்சில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஷாலினி, ஏஎஸ்பியாக ஷிம்லாவில் நியமிக்கப்பட்டார். தற்போது குல்லு மாவட்ட எஸ்பியாக பணியாற்றுகிறார். எனது தந்தை வாழ்வில் பல இன்னல்கள், அவமானங்களைச் சந்தித்தவர். ஆயினும், மிசௌரியில் உள்ள அகடாமியில் நாங்கள் உள்ளே நுழைந்த அந்த நிமிடம், வாங்க சார் என்று, அவரை மரியாதையாக அழைத்தனர். அந்த நேரத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லியுள்ளார், ஷாலினி. (தி இந்து நாளிதழ்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2018, 15:34