மீன் விற்கும் கல்லூரி மாணவி ஹனன் மீன் விற்கும் கல்லூரி மாணவி ஹனன் 

இமயமாகும் இளமை : மீன் விற்கும் கல்லூரி மாணவிக்கு....

மீன் விற்பனை செய்து வாழ்க்கை நடத்திவரும் மாணவியை, கேரளா காதி வாரியத்தின் பக்ரீத், ஓணம் விற்பனைக்கான நிகழ்ச்சியில் விளம்பரத் தூதராக நியமிக்க அரசு திட்டம்

மேரி தெரேசா - வத்திக்கான்

கேரளாவின் எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த, 21 வயது நிறைந்த இளம்பெண் ஹனன் அவர்கள், தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், கல்லூரிக்குச் செல்லும் நேரம் போக மாலை நேரங்களில் மீன் விற்பனை செய்து, தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். மாணவி ஹனன் அவர்கள் பற்றி கடந்த வாரம் மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டதையடுத்து, பாராட்டுகளும், கடும் எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன. இதற்கிடையே இம்மாணவர் பற்றி அறிந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் அவர்கள், முகநூலில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும், ஹனனுக்கு கேரள அரசு துணையிருக்கும் என ஆதரவு தெரிவித்திருந்தார். மாணவி ஹனன், முதல்வர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தவேளையில், துணிச்சலாக இருங்கள் தேவையான உதவிகளைக் கேரள அரசு செய்யும் என்று உறுதியளித்தார். அதோடு, ஹனனுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கக் கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கனக்காகுன்னு அரண்மனையில் ஓணம்-பக்ரீத் காதி விற்பனை தொடக்கவிழா ஆகஸ்ட் 1, இப்புதன்கிழமை நடந்தது. இதில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு மாணவி ஹனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, காதி வாரியத்தின் ஆடைகளை அணிந்து அவர் ஃபேஷன் ஷோவில் பங்கேற்றார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் மாணவி ஹனனுக்கு கேரள முதல்வர் சிறிய நினைவுப் பரிசை வழங்கி, தொடர்ந்து துணிச்சலுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட வேண்டும், முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும், மலையாளத் திரைப்பட இயக்குனர்கள் இருவர், மாணவி ஹனனுக்கு தங்கள் படங்களில் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2018, 15:01