இந்திய கல்வி ஆர்வ வெளிப்பாடு இந்திய கல்வி ஆர்வ வெளிப்பாடு 

இமயமாகும் இளமை : ஐஏஎஸ் ஆன குடும்பத் தலைவி!

‘ஆகாயத்தில் கோட்டை கட்டுவதாகக் கனவு காணுங்கள். பின், உடனடியாக எழுந்து அதற்கான அடித்தளத்தை போட ஆரம்பியுங்கள்’ என்கிறார், அறிஞர் ஒருவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், சித்தார்த்தை மேற்கொண்டு படிக்க வைக்க, அவரது தாயாரால் இயலவில்லை. எனவே, குடும்பச்சூழல் காரணமாக வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், சிறுவயது முதலே கலெக்டர் ஆகவேண்டும் என்ற கனவு அவருக்குள் இருந்தது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட தன்னால் அது இனி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர், தனது மனைவி வழியாக, தனது கனவை நனவாக்கிக் கொள்ள முடிவு செய்தார். அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர் மனைவி ராஷ்மிக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்ற கனவெல்லாம் இருந்ததில்லை. வீட்டில் முழுநேர குடும்பத் தலைவியாகவே இருந்தார்.

தனது மனைவியை ஐஏஎஸ் ஆக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினார் சித்தார்த். பணத் தேவைகளுக்காக, சிறுவயது முதல் தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் கட்டிய வீடு, ஐந்து ஏக்கர் நிலம், தனது கடை என அனைத்தையும் விற்றார். கையில் கிடைத்த பணத்தில், மனைவியின் படிப்பிற்கு தேவையான புத்தகங்களை அவர் வாங்கினார். ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளிலும் ராஷ்மியை சேர்த்துவிட்டார். 2003ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுகளுக்கு தயாரானார் ராஷ்மி. ஆனால், தொடர்ந்து நான்கு முறை அவருக்கு தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

இதற்கிடையே, இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் தன் மனைவியின் கவனம் சிதறிவிடக்கூடாது என நினைத்த சித்தார்த், குழந்தையையும் தானே பார்த்துக்கொண்டார்.

ராஷ்மி, மற்றும், சித்தார்த்தின் முயற்சிகளும், தியாகங்களும் வீண் போகவில்லை. 2010ம் ஆண்டு தனது 29வது வயதில் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றார் ராஷ்மி. தனது இலக்கை அடைந்து விட்ட ராஷ்மி, அதோடு நிறுத்திவிடாமல், தற்போது ஐஏஎஸ் தேர்வுகளுக்காக படித்துவரும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக, தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.

திருமணத்திற்குப் பின்னும் கல்வியில் சாதிக்கமுடியும் என்பதை தன் வாழ்க்கை வழியாக நிரூபித்துக் காட்டியுள்ளார் ராஷ்மி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2018, 13:13