தேடுதல்

தேசப்பற்றை  வெளிப்படுத்தும் மாணவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் மாணவர்கள் 

இமயமாகும் இளமை : தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய வீரர்

கிறித்தவராகப் பிறந்தாலும், தனது மகளுக்கு மாயா என புத்தமதப் பெயரை வைத்து அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். கள்ளர் சமூக மக்கள் அவரை ரோசாப்பூதுரை என்று செல்லமாக அழைத்து வந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ரோசாப்பூத் துரை என அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் அவர்கள், கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இவர் 1937ம் ஆண்டு சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கேரளாவில் நடைபெற்ற வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஆங்கில அரசு குற்றப் பரம்பரை சட்டத்தைச் செயல்படுத்திய போது, அது தொடர்பாகப் பலரின் வழக்கை, தானே முன்வந்து நடத்தி வெற்றி கண்டவர். கேரளாவில் பிறந்தாலும், தமிழகத்தை மையமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர் இவர்.

1887ம் ஆண்டு கேரளாவின் செங்கானூரில் பிறந்த இவர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கேரளாவிற்குத் திரும்பியபோது ஆங்கிலேய அரசு பல உயர் பதவிகளைத் தர இருந்த நிலையில், அப்பதவிகளை ஏற்க மறுத்தார். கிறித்தவராகப் பிறந்தாலும், தனது மகளுக்கு மாயா என புத்த மதப் பெயரை வைத்து, அனைத்து மதத்தினரையும் மதிப்பவராக இருந்தார். ஜார்ஜ் அவர்கள், எப்போதும் தனது சட்டையில் ரோசாப்பூவைக் குத்தியிருந்ததால், கள்ளர் சமூக மக்கள் அவரை ரோசாப்பூதுரை என்று செல்லமாக அழைத்து வந்துள்ளனர். 1918ம் ஆண்டில் சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்கினை எதிர்த்து வாதாடி வெற்றிபெற்றார்.

மகாத்மா அறிவித்த எல்லாப் போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப் அவர்கள்தான் முன்னணியில் இருந்தார். கேரளம், தமிழ்நாடு என இருமாநிலங்களின் போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய நிலையில்தான், காந்திஜியின் நட்பும், தோழமையும் ஜார்ஜ் ஜோசப்பு அவர்களுக்கு கிட்டியது. மகாத்மா காந்தி அவர்கள் நடத்திவந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார். காந்திஜி எப்போது மதுரை வந்தாலும் இவரது வீட்டிலேயே தங்கினார்.

1937ம் ஆண்டு ஜார்ஜ் ஜோசப் அவர்கள், சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் காலமானார். மதுரை புது நல்லமுத்துப் பிள்ளை சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கக்கன் அவர்கள், உள்துறை அமைச்சராக இருந்தபோது ரோசாப்பூதுரை அவர்களுக்கு மார்பளவு சிலையை யானைக்கல் பகுதியில் அமைத்துப் பெருமைப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2018, 15:54