தேடுதல்

திருத்தந்தையுடன் பார்வையற்றோர் திருத்தந்தையுடன் பார்வையற்றோர் 

இமயமாகும் இளமை ...,: பார்வையற்ற இளம் சாதனையாளர்

பார்வையற்றிருந்தால் என்ன?, மற்றவர்களின் அகக் கண்களைத் திறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறதே!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடியிருந்த அந்த அரங்கில் அனைவரது பார்வையும் மேடையில் இருக்க, பார்வை இல்லாத ஒருவர் மேடை ஏற்றப்பட்டு, “இவர்தான் இந்த ஆண்டின் சிறந்த இளம் சாதனையாளர் ஹக்கீம்” என்று அறிவித்து, 'பெட்டகம்' அமைப்பினர் கௌரவ விருதினை வழங்கியபோது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று, கைதட்டி, பாராட்டியது.

கோவை போத்தனுாரில் கூலி தொழிலாளியான முகம்மதிற்கும், சாலிஹாவிற்கும் பிறந்தவர்தான் ஹக்கீம். பிறவியிலேயே பார்வை இல்லை. ஆனால் அதை குறையாக எண்ணாமல், அடுத்து என்ன என்ற எண்ணத்துடன் வளர்ந்தார். பார்வை குறைபாட்டை கொடுத்த அதே இறைவன், இவருக்கு, வியக்கத்தக்க நினைவுத்திறனை கொடுத்துள்ளார். இதனால், ஆரம்பத்தில், பார்வையற்றவருக்கென உள்ள பள்ளியில் படித்தவர், பின்னர், அனைவரோடும் இணைந்து, பொதுப் பள்ளியில் பிரமாதமாக படித்தார். படிக்கும்போதே, தான் ஓர் ஆசிரியராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படித்து, நினைத்தபடியே, 2008ம் ஆண்டில், ஆசிரியர் பணியில் அமர்ந்தார்.

இப்போது, இவரது வகுப்பு என்றால், மாணவர்களுக்கு விருப்பம் அதிகம். அந்த அளவிற்கு, மிகச்சிறப்பாக பாடம் நடத்துகிறார். தனது அபார நினைவுத்திறன் காரணமாக, பாடப் புத்தகங்களையும், பாடத்திட்டங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ள இவர், அதனை மாணவர்கள் மனதில் பதியவைக்கும் வகையில், அருமையாக, சுவராசியமாக வகுப்புக்களை நடத்துகிறார்.

ஹக்கீம் அவர்கள், போத்தனுாரிலிருந்து தனியாகவே பேருந்து ஏறி பள்ளிக்கு வந்துவிடுவார். கேட்டால், என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் எனக்குள் வரவேண்டும், அப்படி வந்தால்தான் நான் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கமுடியும் என்பவர், எப்போதுமே யாரிடமிருந்தும் இரக்கத்தை எதிர்பார்ப்பவர் அல்ல.

‘மாணவர்கள் குறும்பானவர்கள்தான். ஆனால், அவர்களை மதித்தால், அவர்களைப் போல அன்பானவர்களை எங்கும் பார்க்கமுடியாது. அவர்களது அகக்கண்ணை திறக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும், அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது’ என்று சொல்லி பெருமையடைகிறார் ஹக்கீம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2018, 16:16