ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றும் கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வில்பி ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றும் கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வில்பி  

போர்க்கருவி வர்த்தகர்களால் உருவாகும் மோதல்கள்

போர்க்கருவிகளை விற்பனை செய்வோர், சமரசத்தைத் தடுத்து, மோதல்களை வளர்ப்பதில் குறியாய் உள்ளனர் - ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாடுகளுக்கிடையே உருவாகும் மோதல்களும், போர்களும் பெரும் சிக்கலாக மாறிவரும் இன்றையச் சூழலில், சமரச முயற்சிகளும் புதிய, தெளிவான முறையில் சிந்திக்கப்படவேண்டும் என்று ஐ.நா.அவை பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

'மோதல்களைத் தீர்க்க, இணக்கமான வழிகளில் சமரசம் செய்தல்' என்ற மையக்கருத்துடன், ஐ.நா. பாதுகாப்பு அவையில், ஆகஸ்ட் 29, இப்புதனன்று நிகழ்ந்த கூட்டத்தில், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

நாடுகளுக்குள் உருவாகியிருக்கும் புரட்சிக்குழுக்களுக்கு போர்க்கருவிகளை விற்பனை செய்வோர், உள்நாட்டில், மோதல்களை வளர்ப்பதில் குறியாய் இருப்பதை நாம் உணர்ந்து வருகிறோம் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டிய கூட்டேரஸ் அவர்கள், இத்தகைய பேராசைச் சூழலில், சமாதான முயற்சிகள் தோல்வியுறுகின்றன என்று எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நாட்டு அரசிலும், சட்டம், ஒழுங்கு, நீதி ஆகிய உயர்ந்த விழுமியங்கள் வலுவிழந்துள்ள நிலையில், ஐ.நா. போன்ற உலக அமைப்புக்களின் பணி இன்னும் முக்கியமாக மாறிவருகிறது என்று கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வில்பி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் நாட்டில் அடிப்படைவாதத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள PAIMAN என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான Mossarat Qadeem என்ற பெண்மணி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில், போர்களை நிறுத்த பெண்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளித்துள்ளது குறித்து பேசினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2018, 15:17