வத்திக்கானில் திருத்தந்தையை சந்திக்கிறார் கோஃபி அன்னான் வத்திக்கானில் திருத்தந்தையை சந்திக்கிறார் கோஃபி அன்னான் 

ஐ.நா. வின் கோஃபி அன்னான் மரணம்

மறைந்த கோஃபி அன்னான் அவர்கள், 2017ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில், The Elders அமைப்பின் உறுப்பினர்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னாள் பொதுச்செயலரும், நொபெல் அமைதி விருது பெற்றவருமான கோஃபி அன்னான் அவர்கள், தனது எண்பதாவது வயதில், ஆகஸ்ட் 18, இச்சனிக்கிழமையன்று காலமானார்.

1938ம் ஆண்டில், ஆப்ரிக்காவின் கானா நாட்டில் பிறந்த அன்னான் அவர்கள், 1997ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு வரை, ஐ.நா.வின் பொதுச்செயலராகப் பணியாற்றியவர். ஐ.நா. நிறுவனத்தில் பணியாற்றிய அலுவலகர்களில் ஒருவர், இந்தப் பதவியை ஏற்ற முதல் நபர் என்ற பெருமையும், அன்னான் அவர்களுக்கு உண்டு. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தில், 1962ம் ஆண்டு ஒரு சாதாரண அலுவலகராகப் பணியில் சேர்ந்தார் இவர். 2007ம் ஆண்டில் உலகளாவியத் தலைவர்களைக் கொண்ட, The Elders என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் உறுப்பினராக இருந்த அன்னான் அவர்கள், 2013ம் ஆண்டில் அந்த அமைப்பின் தலைவரானார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறந்த நிர்வாகப் பணிகள் மற்றும், அமைதியான ஓர் உலகை உருவாக்க எடுத்த முயற்சிகள் ஆகியவற்றைப் பாராட்டி, 2001ம் ஆண்டில், அன்னான் அவர்களுக்கும், ஐ.நா.வுக்கும், நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.

2003ம் ஆண்டில், ஐ.நா.வின் அனுமதியின்றி, அமெரிக்க ஐக்கிய நாடும், பிரிட்டனும் ஈராக்கைத் தாக்கியதைக் கடுமையாய் சாடியவர், கோஃபி அன்னான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2018, 15:53