லைபீரியாவில் இந்திய அமைதிப்படை லைபீரியாவில் இந்திய அமைதிப்படை 

இந்தியாவின் பணிகள் விலைமதிப்பற்றவை

1948ம் ஆண்டிலிருந்து உலகில் உருவாக்கப்பட்ட 71 ஐ.நா. அமைதிகாக்கும் பணியிடங்களில், 49ல், 2 இலட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர். ஐ.நா.வின் இப்பணிகளில், தற்போது ஏறத்தாழ 6,700 இந்தியப் படைவீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதி காக்கும் பணிகளில், இந்தியா ஆற்றி வரும் சேவைகள் விலைமதிப்பற்றவை என, ஐ.நா.வின் அமைதிகாக்கும் அமைப்பின் நேரடி பொதுச் செயலர், Jean-Pierre Lacroix அவர்கள் பாராட்டினார்.

ஐ.நா. அமைதிகாக்கும் அமைப்பில் இந்தியா இணைந்ததன் எழுபதாம் ஆண்டு நிறைவை, ஐ.நா.வும், இந்தியாவும் இணைந்து இவ்வெள்ளியன்று சிறப்பித்த நிகழ்வில் உரையாற்றிய Lacroix அவர்கள், புதிது புதிதாக எழுந்துவரும் சவால்கள் மத்தியில், நலிந்த மக்கள் மத்தியில் அர்த்தமுள்ள பங்கேற்பை, இந்தியா போன்ற நாடுகள் அளிக்கின்றன என்று கூறினார்.

கடந்த ஜூனில், இந்தியா சென்றிருந்தவேளையில், இந்திய அதிகாரிகளிடம், தன் பாராட்டை நேரிடையாகவும் தெரிவித்த Lacroix அவர்கள், 2007ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை, லைபீரியத் தலைநகர் மொன்ரோவியாவில், இந்தியப் பெண் காவல்துறையினர், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிட்டார்.

1950ம் ஆண்டில் தொடங்கிய கொரியச் சண்டையின்போது, கொரியாவில் ஐ.நா. பணிகளுக்கு உதவுவதற்குப் பணிகளைத் தொடங்கிய இந்தியா, அதைத் தொடர்ந்து நீண்ட காலமாக, இப்பணியில் ஐ.நாவுக்கு உதவி வருகின்றது என்றும், Lacroix அவர்கள் தெரிவித்தார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2018, 16:03